கால்பந்தின் மிகப்பெரிய திருவிழாவான ஃபிஃபா உலகக் கோப்பை கத்தாரில் நடைபெற்று வரும் நிலையில் சில போட்டியின் முடிவுகள் ரசிகர்களை ஆனந்தமும், அதிர்ச்சியும் அடைய வைத்து வருகிறது. த்ரில்லாக நடந்து வரும் ஒவ்வொரு போட்டிகளிலும், கால்பந்து ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தனித்துவமான வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள். அந்த வகையில், தனது அணிக்கு ஆதரவளிப்பதற்கான ஒரு சுவாரஸ்யமான வழியில் உடை அணிந்து வந்த பிரேசில் ரசிகர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வித்யாசமான ஜெர்சி
இந்த போட்டியில் அதிர்ச்சிகரமாக குரோஷியாவிடம் பிரேசில் தோல்வியை சந்தித்து தொடரை விட்டு வெளியேறியது. "பிரேசில் குரோஷியாவிடம் ஆட்டத்தை இழந்தது, ஆனால் உலகக் கோப்பையில் பல ஆண்டுகளாக, அவர்கள் மிகவும் அர்ப்பணிப்புள்ள ரசிகர்களைக் கொண்டுள்ளனர். பிரேசிலிய கால்பந்து ரசிகர் ஒருவர் கண்ணாடியால் செய்யப்பட்ட ஒரு உடையை அணிந்து வந்து கவனத்தை ஈர்த்தார்" என்று எழுதிய ஒரு ட்விட்டர் பயனர் இந்த வைரல் வீடியோவை பகிர்ந்திருந்தார்.
கண்ணாடி ஜெர்சி
வீடியோவில் பிரேசிலிய கால்பந்து ரசிகர் ஒருவர் கண்ணாடியால் செய்யப்பட்ட மொசைக் பேட்டர்ன் பிரேசில் ஜெர்சியை அணிந்திருக்கிறார். அவரோடு மற்ற கால்பந்து ரசிகர்கள் புகைப்படம் எடுத்து செல்வதை விடியோவில் காணமுடிகிறது. இந்த விடியோ பல சமூக ஊடக தளங்களில் வெளிவந்து ஆயிரக்கணக்கான பார்வைகளையும் லைக்குகளையும் குவித்துள்ளது. வீடியோவின் பின்னணியில் உள்ள மைதானம் நேற்றைய பிரேசில் மற்றும் குரோஷியா போட்டி நடந்த கத்தார் மைதானம் போல் இருப்பதாக பல இணைய பயனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரசிகர்கள் கமெண்ட்ஸ்
"இது அநேகமாக உலகக் கோப்பை ஆடைகளின் வரலாற்றில், சிறந்த உலகக் கோப்பை ஆடையாக இருக்கும்" என்று ஒரு பயனர் எழுதினார். "இந்த உடை மிகவும் பிடித்திருக்கிறது! அவர் கணினிக்குள் இருந்து வெளியேறியது போல் தெரிகிறது. அருமையான யோசனை!" என்று இன்னொருவர் கமெண்ட் செய்திருந்தார். மற்றொரு பயனர், "அது மிகவும் அருமையாக இருக்கிறது, அவர் காப்புரிமை பெற்று அந்த ஐடியாவை விற்பனை செய்வார் என்று நம்புகிறேன்." என்றார். இது போன்ற கமெண்டுகளை நெட்டிசன்கள் பகிர்ந்தாலும் பிரேசில் ரசிகர்களால் இதனை முழுமையாக கொண்டாட முடியவில்லை. பெரும்பாலும் அந்த உடையை அணிந்து வந்த ரசிகருக்கும் போட்டி முடிந்ததும் அப்படித்தான் இருந்திருக்கும்.
பிரேசில் அதிர்ச்சி தோல்வி
ஃபிஃபா உலகக் கோப்பையில் கடந்த வருடம் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஃபைனலுக்கு சென்ற குரோஷியா மீண்டும் வெள்ளிக்கிழமை பிரேசிலை 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்று அதிர்ச்சியளித்துள்ளது. பிரேசிலின் சிறந்த வீரர்களில் ஒருவரான நெய்மர் கடுமையான தோல்விக்குப் பிறகு முற்றிலும் நசுக்கப்பட்டு, கண்ணீருடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். உலகக் கோப்பை காலிறுதி தோல்விக்குப் பிறகு பேசிய அவர் சர்வதேச அணியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறினார். "நான் தேசிய அணியில் எந்த கதவுகளையும் மூடவில்லை, ஆனால் நான் திரும்பி வருவேன் என்பதற்கும், 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்கமுடியவில்லை," என்று அவர் கூறினார், "எனது தேசிய அணிக்காக, எது சரியானது என்பதைப் பற்றி நான் இன்னும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்." என்றார். மறுபுறம், குரோஷியா நெதர்லாந்தை தோற்கடித்த அர்ஜென்டினாவுடன் அரையிறுதியில் மோத உள்ளது.