போட்டி தொடங்கிய 23 வினாடிகளில் கோல் அடித்து அதிவேகமாக யூரோ கோப்பையில் கோல் அடித்த அணி என்ற வரலாற்று சாதனையை செய்திருக்கிறது அல்பேனியா அணி. இந்த கோலை அடித்தவர் அல்பேனியா வீரர்  நெதிம் பஜ்ராமி.


யூரோ கோப்பை 2024:


கடந்த ஜூன் 14 ஆம் தேதி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது UEFA (Union of European Football Associations) யுஇஎஃப்ஏ யூரோ கோப்பை 2024 தொடர். அந்தவகையில் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இத்தாலி உட்பட மொத்தம் 24 அணிகள் விளையாடுகின்றன. லீக், நாக் – அவுட் என மொத்தம் 51 போட்டிகள் நடைபெறுகிறது. 


வரலாற்று சாதனை செய்த அல்பேனியா அணி:


அதன்படி இன்று (ஜூன் 16) நடைபெற்ற போட்டியில் குரூப் B யில் இடம் பெற்றுள்ள இத்தாலி மற்றும் அல்பேனியா அணிகள் மோதின. இந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணி வெற்றி பெற்று இருந்தாலும் ஒரு வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது அல்பேனியா அணி. அதாவது போட்டி தொடங்கிய 23 வினாடிகளில் தங்கள் அணியின் முதல் கோலை அடித்தது அல்பேனியா அணி.






இந்த கோலை அடித்தவர் நெதிம் பஜ்ராமி. இதன் மூலம் யூரோ கோப்பை வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனையை அந்த அணி நிகழ்த்திகாட்டி உள்ளது. அதேநேரம் அல்பேனியாவை முந்த வேண்டும் என்ற நோக்கில் 11 வது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் அலெஸான்ட்ரோ பஸ்தோனி கோல் அடித்து போட்டியை சம நிலைக்கு கொண்டு வந்தார்.


வெற்றி பெற்ற இத்தாலி:


அடுத்த ஐந்து நிமிடங்களிலேயே இத்தாலி அணியின் நிக்கோலோ பாரெல்லா ஒரு கோல் அடித்தார். இதை அடுத்து 16 நிமிடங்களிலேயே இத்தாலி 2 - 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து அந்த முன்னிலையை தக்கவைத்த இத்தாலி கடைசி வரை அல்பேனியா அணியை கோல் அடிக்க விடவில்லை. அதன்படி இந்த போட்டியை இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


முன்னதாக கடந்த 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற யூரோ கோப்பை போட்டியின் போது கிரீஸ் அணிக்கு எதிராக ரஷ்ய அணி 67 வினாடிகளில் கோல் அடித்து இருந்தது. அதாவது ரஷ்ய அணியின் சார்பில் டிமிட் கிரிசெங்கோ தான் இந்த கோலை அடித்து சாதனை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.