வட அமெரிக்க நாடான கனடாவும், தென்கிழக்கு ஐரோப்பிய நாடான குரோஷியாவும் இன்று குரூப் எஃப் பிரிவில் மோதின. கலிஃபா இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் இரவு 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் குரோஷியா 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
தரவரிசையில் 41 ஆவது இடத்தில் உள்ள கனடா, பெல்ஜியத்துடனான முதல் ஆட்டத்தில் தோற்றது. தரவரிசையில் 12ஆவது இடத்தில் உள்ள குரோஷியாவுடன் இன்று கனடா மல்லு கட்டியது.
கனடா அணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்றது. இந்நிலையில், இந்த ஆட்டம் தொடங்கிய 67ஆவது விநாடியில் கனடா வீரர் அல்போன்ஸ் டேவிஸ் கோல் அடி்ததார்.
இதுதான் நடப்பு உலகக் கோப்பையில் மிக விரைவாக அடிக்கப்பட்ட கோலாகும். எனினும் அதன்பிறகு சுதாரித்துக் கொண்ட குரோஷியா 3 கோல்களை வலைக்குள் தள்ளியது. அந்த அணியின் ஆன்ட்ரெஜ் கிராமரிக் 36-ஆவது நிமிடத்திலும், 70 ஆவது நிமிடத்திலும் இரண்டு கோல்களை அடித்தார்.
மார்கோ லிவாஜா 44ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். கால்பந்து பெரும்பாலான நேரம் குரோஷியா வசமே இருந்தது. கூடுதல் நேரத்தில் மற்றொரு கோல் குரோஷியாவுக்கு கிடைத்தது. இதன்மூலம் 4-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா வென்றது. அதிவிரைவாக கோல் அடித்த கனடாவால் வெற்றி பெற முடியாமல் போனது சோகமே.
முன்னதாக, குரூப் இ பிரிவில் இன்று நடந்த முதல் ஆட்டத்தில் ஜப்பான் அணியை மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகா 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த ஆட்டம் அகமது பின் அலி ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.
இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை. கடைசியாக 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தப் போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.
FIFA WC 2022: டான்ஸ் ஆடிய மெஸ்ஸி.. கொண்டாட்டத்தில் அர்ஜென்டினா வீரர்கள்... வைரலாகி வரும் வீடியோ!
8 பிரிவுகள்
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்திக்கும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறும்.
மொத்தம் எத்தனை ஆட்டங்கள்
48 லீக் ஆட்டங்கள் உள்பட மொத்தம் 64 ஆட்டங்கள் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் நடைபெறுகின்றன.
முதல்முறை
அரபு நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். அத்துடன் ஆசிய கண்டத்தில் கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.