சவுதி அரேபியாவுடனான தோல்விக்கு பிறகு நிச்சயம் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் அர்ஜெண்டினா அணி மெக்ஸிகோ அணிக்கு எதிராக களமிறங்கியது.
ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது போலவே அர்ஜென்டினா வென்றது. இதையடுத்து உடைமாற்றும் அறையில் அர்ஜென்டினா வீரர்கள் நடனமாடி உற்சாகமாக வெற்றியை கொண்டாடினர். மெஸ்ஸி சக வீரர்களுடன் பாட்டு பாடி நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லுசைல் ஸ்டேடியத்தில் நடந்த இந்த சி பிரிவு ஆட்டத்தில் ஒரு தோல்விக்கு பிறகு அர்ஜெண்டினா களமிறங்கியதால் அனைவரது எதிர்பார்ப்பும் மெஸ்ஸி என்னும் ஒரு தலைவன் மீது இருந்தது. போட்டி தொடங்கியது முதல் பரபரப்பான சூழ்நிலை உச்சத்தை தொட, முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து இரண்டாம் பாதி தொடங்கிய சில மணிநேரங்களிலேயே அர்ஜெண்டினா அணி கேப்டன் மெஸ்ஸி 64 வது நிமிடத்தில் மெக்ஸிகோ அணிக்கு எதிராக அட்டகாசமாக கோல் அடித்தார்.
இந்த கோல் மூலம் ஒட்டுமொத்த ஃபிபா உலகக் கோப்பை தொடரில் மெஸ்ஸியின் 8வது கோல் இதுவாகும்.
இதை தொடர்ந்து மெக்ஸிகோ எவ்வளவோ முறை கோல் அடிக்க முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. இருப்பினும் விட்டுகொடுக்காத அர்ஜெண்டினா அணி 87 வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார். இந்த கோலை பெர்னாண்டெஸ் தனது முயற்சியால் வலைக்குள் தள்ளினார். இதையடுத்து போட்டி முடிவில் அர்ஜெண்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
மெக்ஸிகோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மெஸ்ஸி கோல் அடித்ததன் மூலம் அர்ஜெண்டினா அணியின் ஜாம்பவான் டியாகோ மரடோனாவுடன் சாதனையை சமன் செய்துள்ளார்.
இதுவரை உலகக் கோப்பை தொடரில் 21 ஆட்டங்களில் விளையாடியுள்ள மரடோனா 8 கோல்களை அடித்துள்ளார். அதேபோல், மெஸ்ஸியும் தனது 21 ஆட்டத்தில் 8 கோல்களை அடித்து உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2ம் இடம் பிடித்து மரடோனாவின் சாதனையை சமன் செய்தார். இந்த பட்டியலில் அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா 10 கோல்கள் முதல் இடத்தில் இருக்கிறார்.
அதேபோல், மற்றொரு நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகக் கோப்பை தொடரில் 8 கோல்கள் அடித்துள்ளார்.தற்போது மெஸ்ஸியும் 8 கோல்களுடன் சம நிலையில் உள்ளார். அர்ஜெண்டினா அணிக்காக இதுவரை 168 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி, 94 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜெண்டினாவின் கால் இறுதி வாய்ப்புகள் எப்படி?
லீக் போட்டிகளின் முதல் ஆட்டத்தில் செளதி அரேபியாவிடம் தோற்ற அர்ஜென்டீனா, இரண்டாவது ஆட்டத்தில் மெக்ஸிகோவை வென்றுள்ளது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 1-ம் தேதி, மூன்றாவது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் போலந்துடன் மோதுகிறது அர்ஜெண்டினா. இந்த ஆட்டத்தில் வென்றால், கால் இறுதிக்கு எளிதாகச் சென்றுவிடும். போட்டி டிராவில் முடிந்தால் கூட அர்ஜெண்டினாவுக்கு கால் இறுதி வாய்ப்புகள் அதிகம். ஆனால் தோற்கக்கூடாது என்பது மிக முக்கியம். தற்போதுள்ள ஃபார்மினைப் பார்க்கும்போது, கால் இறுதிக்கு அர்ஜெண்டினா தகுதிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.