ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இரண்டாவது சுற்று தகுதிச் சுற்றில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. நேற்று இரவு கத்தாருக்கு எதிரான சர்ச்சைக்குரிய கோல் காரணமாக இந்திய கால்பந்து அணி  2-1 என்ற கோல் கணக்கில் கத்தாரிடம் தோல்வியை சந்தித்தது. நடுவர் கொடுத்த மோசமான தீர்ப்பு காரணமாக இந்தியாவால் ஃபிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் மூன்றாவது சுற்றுக்கு செல்ல முடியாமல் போனது. இதன் மூலம் இந்திய அணி வரலாறு படைக்கும் வாய்ப்பை இழந்துள்ளது.


37வது நிமிடத்தில் இந்திய அணிக்காக லாலியான்ஜுவாலா சாங்டே ஒரு கோல் அடித்தார். இந்த கோல் காரணமாக இந்திய அணி ஒரு கட்டத்தில் 1-0 என முன்னிலையில் இருந்தது. நடுவர் கொடுத்த ஒரு மோசமான தீர்ப்பால் இந்திய அணி ஃபிஃபா உலகக் கோப்பைக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது. இதையடுத்து, இந்த போட்டியில் என்ன நடந்தது..? எதனால் இந்திய அணி ஃபிஃபா உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது என்ற முழு விவரத்தை பார்க்கலாம். 






முழு விவரம்: 


கத்தாருக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு இந்தியா மட்டும் காரணம் அல்ல, போட்டியின் நடுவர்தான் காரணம். உண்மையில், போட்டியின் போது, ​​கத்தார் வீரர்களால் அடிக்கப்பட்ட கோல், முற்றிலும் தவறானது. ஆனால் போட்டியில் முக்கிய பங்கு வகித்த கோலை சரியானது என்று நடுவர் அறிவித்தார். இதனால், இந்திய அணியின் தலையெழுத்து மொத்தமாக மாறியது. 


என்ன நடந்தது என்றால், 37வது நிமிடத்தில் இந்தியா அணி வீரரான லாலியன்சுவாலா சாங்டே அடித்த கோலால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. ஆனால் போட்டியின் 73வது நிமிடத்தில் கத்தார் அணியின் யூசுப் அய்மென் சர்ச்சைக்குரிய கோலை அடித்தார். இது போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, பந்து கோல் கம்பத்திற்கு வெளியே சென்றபோது யூசுப் அய்மன் கோல் அடிக்க முயன்றபோது அதை இந்திய கோல் கீப்பர் தனது கால்களை மடக்கி தடுத்தார். அப்போது கத்தார் நாட்டை சேர்ந்த மற்றொரு வீரர் தனது காலால் பந்தை பின்னால் இழுக்க, யூசுப் அய்மன் அதை கோல் அடித்தார்.






இது தவறானது என்று இந்திய கால்பந்து அணியினர் முறையிட, அப்போது நடுவர் கோல் சரியானது என்று அறிவித்தார். இந்த கோலினால் முழு போட்டியின் முடிவே தலைகீழாக மாற்றியது. தொடர்ந்து 85 வது நிமிடத்தில் அஹ்மத் அல்-ரவி மூலம் கத்தார் தனது இரண்டாவது கோலைப் போட, கத்தார் 2-1 என முன்னிலை பெற்று வெற்றி பெற்றது. 


இந்த தோல்வியின் மூலம் 2026 ஃபிபா உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியின் கனவும் தகர்ந்துள்ளது. சமூக வலைதளங்களில், நடுவரின் முடிவு தவறானது என்று ரசிகர்கள் கூறுவதுடன், இந்தியாவை வேண்டுமென்றே தோற்கடிக்க நடுவர் இதுபோன்ற தவறான முடிவை எடுத்துள்ளார் என்றும் கூறி வருகின்றனர். 


பொதுவாக, கோல் கீப்பர் லைனில் பந்து சென்றுவிட்டால், அதை அந்த கோல் கீப்பரே எடுத்து வீச வேண்டும். இதுவே விதிமுறை. ஆனால், எதிர்த்து விளையாடும் வீரர்கள் அதை கோலாக மாற்றுவது தவறான ஒன்றுதான்.