2010ம் ஆண்டு இதே நாளில், ஜிம்பாப்வே நாட்டிலுள்ள ஹராரேயில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விராட் கோலி அறிமுகமானார். இதையடுத்து, இன்றுடன் இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டியில் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் விராட் கோலி. 






அப்போது விராட் கோலி வெறும் 21 வயதே ஆகி இருந்தது. தனது முதல் ஆட்டத்திலேயே அதிரடியான  ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கோலி. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சினால் 111 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 112 ரன்களை துரத்திய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்களுடன் திணறியது. அப்போது அந்த ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்கு கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டு இருந்தார். கேப்டன் சுரேஷ் ரெய்னா 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவே, டாப் ஆர்டர் சொதப்பியது. இதன்பிறகு, விராட் கோலியுடன் யூசப் பதான் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். 


விராட் கோலியும், அதிரடி ஆட்டக்காரர் யூசப் பதானும் நங்கூரமாய் நின்றும், ஆக்ரோஷமாக ஆடியும் 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அனைத்தனர். இதையடுத்து, இந்திய அணி 5 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், 4 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. 


விராட் கோலி 21 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 26* ரன்களையும், பதான் 24 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 37* ரன்களையும் ஆட்டமிழக்காமல் எடுத்திருந்தனர். 


டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி எப்படி..? 


சமீபத்தில் விராட் கோலி ஐபிஎல் 2024 போட்டியில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் முதலிடம் பிடித்தார். ஐபிஎல் 2024 சீசனி விராட் கோலி 741 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால், ஐபிஎல்லுக்கு பிறகு தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை விராட் கோலிக்கு சரியாக அமையவில்லை. 


அயர்லாந்துக்கு எதிராக களமிறங்கிய விராட் கோலி 5 பந்துகளில் 1 ரன் எடுத்து அவுட்டானார். அதேசமயம், பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி, 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து அதிர்ச்சியளித்துள்ளார். ஆனால், ஐபிஎல் 2024 சிறப்பான சீசனுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியின் ஆட்டம் குறித்து மீண்டும் விவாதம் தொடங்கியுள்ளது. 


விராட் கோலி டி20 ரெக்கார்ட்: 


விராட் கோலி இதுவரை இந்திய அணிக்காக 119 போட்டிகளில் (111 இன்னிங்ஸ்) களமிறங்கி 1 சதம், 37 அரைசதங்கள் உள்பட 4042 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச டி20யில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 122 ரன்களாகும். இதையடுத்து, சர்வதேச டி20 போட்டிகளில்  அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் பாபர் அசாமுக்கு பிறகு விராட் கோலி 2வது இடத்தில் இருக்கிறார். பாபர் அசாம் தற்போது 4113 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 


இந்திய டி20 அணியின் கேப்டனாகவும் விராட் கோலி இருந்துள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 50 போட்டிகளில் கேப்டனாக தலைமை தாங்கி, அதில் 30 வெற்றியையும், 16 தோல்வியும் பெற்று கொடுத்துள்ளார். மேலும், இரண்டு போட்டிகள் டையில் முடிந்தது. இதையடுத்து கேப்டனாக விராட் கோலி 64.58 என்ற வெற்றி சதவீததை கொண்டுள்ளார். கடைசியாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 2021 டி20 உலகக் கோப்பையில் விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதுவே, டி20ஐ கேப்டனாக இவரது கடைசி பணியாகும்.