கால்பந்தாட்ட உலகக்கோப்பையை அர்ஜெண்டினா அணி வெல்ல வேண்டும் என்ற கோடிக்கணக்கான ரசிகர்களின் விருப்பத்திற்கு ஒரே காரணமாக இருந்தவர் மெஸ்ஸி. 35 வயதான மெஸ்ஸி இதுவரை கால்பந்தில் படைக்காத சாதனைளே இல்லை என்று சொல்லுமளவிற்கு சிறந்த வீரருக்கான விருது உள்பட ஏராளமான விருதுகளை வென்று படைத்துள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். இதற்கு முன்பு விளையாடிய 4 உலகக்கோப்பையிலும் சேர்த்து 6 கோல்கள் மட்டுமே அடித்திருந்தார்.
சாதனை படைத்த மெஸ்ஸி:
இந்நிலையில் தான், நடப்பாண்டில் கத்தாரில் நடைபெற்ற கால்பந்தாட்ட உலகக்கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில், மெஸ்ஸி 7 கோல்களை அடித்து அசத்தினார். இதன் காரணமாக தங்க கால்பந்து விருது வென்ற மெஸ்ஸி, 92 ஆண்டுகால உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில், சிறந்த வீரருக்கான கோல்டன் பாலை ( தங்க பந்து) இரு முறை வென்ற ஒரே வீரர் மற்றும் முதல் வீரர் என்ற புதிய வரலாற்றை மெஸ்ஸி படைத்துள்ளார். இதற்கு முன்பாக, 2014ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி தங்கபந்து வென்று சாதனை படைத்திருந்தார்.
குடும்பத்திற்கு நன்றி - மெஸ்ஸி:
இதையடுத்து உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள், மெஸ்ஸிக்கு இன்றளவும் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். தனது நீண்ட கால கனவை நிறைவேற்றிக்கொண்டு கோப்பையுடன் சொந்த ஊருக்கு, சென்ற மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இந்நிலையில், புத்தாண்டையொட்டி மெஸ்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மெஸ்ஸி இன்ஸ்டா பதிவு:
அதில், என்னால் மறக்கவே முடியாத ஒரு ஆண்டு நிறைவடைகிறது. எப்போதும் எனது ஒரே கனவாக இருந்தது அண்மையில் உண்மையானது. ஆனால் நான் அதை ஒரு அற்புதமான குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் அது சரியாக இருக்காது. சிறந்த நபர் ஒருவரும், சில நண்பர்களும் எனக்கு எப்போதும் ஆதரவாக இருக்கின்றனர். நான் கீழே விழுந்தால் அவர்கள் தான் அப்போது தூக்கி விடுகின்றனர் எனவும் மெஸ்ஸி பதிவிட்டுள்ளார். அதோடு, தனது மனைவி மற்றும் குழந்தைகள் உடன் கூடிய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.