உலக்கோப்பை கால்பந்தாட்ட தொடரின் காலிறுதிப்போட்டியில் மொராக்கோவும், போர்ச்சுகல் அணியும் மோதின. ரொனால்டோ இடம்பெற்றுள்ள அணி என்பதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் பாதியில் மொரோக்கா அணி, முதல் கோலை பதிவு செய்தது. போர்ச்சுல் அணி எவ்வளவோ முயன்று பார்த்தும் 90 நிமிடங்கள் முடிவில் போர்ச்சுல் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. ஸ்டாப்பேஜ் டைம் கூடுதலாக 8 நிமிடங்கள் வழங்கப்பட்டது. எனினும், அந்த கூடுதல் நிமிடத்திலும் போர்ச்சுகலால் கோல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து, மொரோக்கா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
போட்டியின் இரண்டாவது பாதியில் களத்தில் இறங்கிய ரொனால்டோ, எவ்வளவோ முயன்றும் ஒரு கோலை கூட போட முடியவில்லை. இதுதான் ரொனால்டோவுக்கு கடைசி உலகக் கோப்பை கால்பந்து தொடராகும். முக்கியமான ஆட்டமான இதில் போர்ச்சுகல் தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கண்ணீருடன் தனது அறைக்குச் சென்றார். அவரை சிலர் ஆறுதல் படுத்தினர். மைதானத்தில் ஒட்டுமொத்த போர்ச்சுகல் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். சமூக வலைதளங்களிலும் தங்களது வேதனையை பதிவிட்டு வந்தனர்.
இதனிடையே, உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டிக்கு மொராக்கோ முதன்முறையாக முன்னேறியதால், அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். இதனால், மைதானத்திலேயே அவர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். அதேபோன்று பிரான்சில் உள்ள புகழ்பெற்ற பாரிசியன் அவென்யூ பகுதியில் ஆயிரக்கணக்கான மொராக்கோ ரசிகர்கள் குவிந்தனர். தங்கள் அணியின் கொடியை அசைத்தும், முழக்கங்களை எழுப்பியும், கார் ஹார்ன்களை அடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனிடையே நடைபெற்ற மற்றொரு காலிறுதி போட்டியில், நடப்பு சாம்பியனான பிரான்சு அணி, இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இதையடுத்து, பிரான்சு ரசிகர்கள் ஏராளமானோரும் பாரிசியன் அவென்யூ பகுதியில் குவிந்தனர். அடுத்த நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில், இந்த இரு அணிகளும் தான் மோத உள்ளதால் அந்த ரசிகர்கள் இடையேயான கொண்டாட்டம் மோதலாக மாறியது. இதை தடுக்க வந்த போலீசாருடனும், ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டனர். சாலையோரம் இருந்த கடைகளையும், வாகனங்களையும் அடித்து உடைத்தனர். சில வாகனனங்களை தீயிட்டு கொளுத்தினர்.
இதனால் பாரிசியன் அவென்யூ பகுதி கலவர பூமியாக மாற, அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு கூட்டத்தை கலைக்கும் முயற்சி தீவிரமாக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக கண்ணீர் புகை குண்டும் வீசப்பட, அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. தொடர்ந்து அங்கிருந்து ரசிகர்கள் கூட்டம் போலீசாரால் விரட்டியடிக்கப்பட்டது.