ஐரோப்பாவின் டாப் 5 லீக்குகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் லீக் 1 தொடரில் உள்ள பிரபல அணிதான் பி.எஸ்.ஜி. இங்கிலாந்தின் பிரீமியர் லீக் உடன் ஒப்பிடும்போது, மிகவும் எளிதான லீக் ஆன இதில் இவர்கள்தான் ஜாம்பவான். இந்த க்ளப்பில் தான் இளம் கால்பந்து சூப்பர் ஸ்டார் கைலியன் எம்பாப்பே விளையாடி வருகிறார். 24 வயதாகும் இவர், கால்பந்து உலகில் பல்வேறு சாதனைகளை திருத்தி எழுதப் போகிறார் என விமர்சகர்கள் பலரும் கணித்து வரும் நிலையில், அவர் அந்த கிளப்பை விட்டு விலகுகிறார் என்ற தகவல்தான் கால்பந்து உலகின் ஹாட் செய்தி.



கையெழுத்தாகாத நீட்டிப்பு ஒப்பந்தம்


கைலியன் எம்பாப்பே, தலைசிறந்த க்ளப்பாக விளங்கும் பி.எஸ்.ஜி அணிக்காக 2017ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இந்நிலையில் பி.எஸ்.ஜி அணியில் இருந்து வெளியேறப் போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தற்போதைய நிலவரப்படி 2025ஆம் ஆண்டு வரை பி.எஸ்.ஜி க்ளப் உடன் எம்பாப்பே ஒப்பந்தம் உள்ளது, ஆனால், அதிலும் 2024 வரை தான் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் உள்ளது. அடுத்த ஒராண்டிற்கான ஒப்பந்தத்தை நீட்டிக்க எம்பாப்பே கையெழுத்திட வேண்டும். ஆனால் இதுவரை அதற்கு முன் வராத அவரை ரசிகர்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். அடுத்த சீசனில் தான் பாரிஸில் இருக்கப் போவதாகவும், ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு வெளியேறப் போவதாகவும் பிரெஞ்சுக்காரர் சமீபத்தில் வெளிப்படுத்தினார்.


தொடர்புடைய செய்திகள்: TN Rain Alert: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? மழை நிலவரம் இதோ..


மெஸ்ஸி போல ஃப்ரீ ஏஜென்ட் ஆவாரா?


அடுத்த ஓராண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஜூலை 31 வரைதான் கால அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குள் கையெழுத்திடவில்லை என்றால் அவர் ஃப்ரீ ஏஜென்ட் ஆகிவிடுவார். அப்படியென்றால் அவரை எந்த அனி வேண்டுமானாலும் ஏலத்தில் எடுக்கலாம் என்று பொருள். இப்படிதான் சமீபத்தில் அதே அணியில் இருந்து விலகிய மெஸ்ஸி ஃப்ரீ ஏஜென்ட் ஆக மாறினார். பின்னர் அவர் MLS பக்கமான இன்டர் மியாமி அணிக்காக ஒப்பந்தம் செய்துகொண்டார். 



விலகச்சொன்ன மெஸ்ஸி


தற்போதைய தகவல் என்னவென்றால், ஸ்பெயின் ஊடகங்கள் கூறுவதுபடி, மெஸ்ஸி எம்பாப்பேவை PSG யில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் அவரை பார்சிலோனா அல்லது ரியல் மாட்ரிட்டில் சேருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். "எம்பாப்பே பார்சிலோனா அணிக்கு செல்வதை நான் விரும்புகிறேன். மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்பினாலும் தவறில்லை, அதையும் செய்யலாம். உண்மையாகவே அவை அனைத்திற்கும் நீங்கள் தகுதியானவர்" என்று மெஸ்ஸி கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் எம்பாப்பேவிடம் அவரது PSG எதிர்காலம் பற்றி கேட்டபோது, "நான் ஏற்கனவே கேள்விக்கு பதிலளித்துள்ளேன். கிளப்பில் தொடர்வதே எனது நோக்கம் என்று கூறினேன். பாரீஸ் செயின்ட்-ஜெர்மைனில் ஆடுவது இப்போதைக்கு எனது ஒரே விருப்பம்." என்றார்.