தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பின் (SAFF) சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது. பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் ஜூலை மாதம் 4ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது. இந்தியா ஆண்கள் அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் ஆண்கள் அணியை எதிர்கொண்டது. 


அனல் பறந்த போட்டி:


இந்திய, பாகிஸ்தான் அணிகள், மோதிக் கொண்டதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இறுதியில், சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வென்றது. போட்டியின் நடுவே பாகிஸ்தான் அணி வீரர்களுடன் இந்திய அணியின் தலைமை பயற்சியாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


45 நிமிடங்கள் முடிவில் இரண்டாவது விசில் அடிப்பதற்கு ஒரு சில மணி நிமிடங்களுக்கு முன்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் ஸ்டிமாக், பாகிஸ்தான் அணி வீரர்கள் சிலருடன் கடும் வாக்குவாகத்தில் ஈடுபட்டதால் அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. முதல் பாதியின் 45ஆவது நிமிடத்தில் பாகிஸ்தானுக்கு ஒரு த்ரோ வழங்கப்பட்டதால் ஸ்டிமாக் கோபம் அடைந்தார்.


தலைமை பயற்சியாளர் செய்த சம்பவம்:


கோட்டிற்கு வெளியே சென்ற பந்தை, பாகிஸ்தான் வீரர் எடுத்து த்ரோ செய்யும்போது, ஸ்டிமாக் அதை தடுத்து நிறுத்தினார். இதனால், பாகிஸ்தான் அணி வீரர்களுக்கும் இந்திய அணியின் தலைமை பயற்சியாளருக்கும் மோதல் ஏற்பட்டது. போட்டியில் இருந்து ஸ்டிமாக் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த சம்பவத்திற்குப் பிறகு சந்தேஷ் ஜிங்கன் மற்றும் ரஹிஸ் நபி ஆகியோருக்கு யெல்லோ கார்டு வழங்கப்பட்டது.


பாகிஸ்தான் அணியின் கோல்கீப்பிங் பயிற்சியாளர் மார்செலோ ஷ்ரோடர் கோஸ்டா, கைகலப்பின் போது பயிற்சியாளர் ஒருவரை தலையால் முட்டி தாக்கினார். பாகிஸ்தான் மற்றும் இந்திய அணி வீரர்கள் இடையே நடைபெற்ற இந்த சம்பவம், சமூக வலைதளத்தில் பெரும் விவாத பொருளை கிளப்பியுள்ளது.


பலம் வாய்ந்த இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டதால், இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தது. அதற்கு ஏற்றார் போல், முதல் பாதியிலேயே இந்திய அணி இரண்டு கோல்களை அடித்து அசத்தியது. கேப்டன் சுனில் சேத்ரி, முதல் இரண்டு கோல்களை அடித்து அதிரடி காட்டினார். பின்னர், போட்டியின் 74ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலை அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார் சுனில் சேத்ரி.


   






2023ஆம் ஆண்டு SAFF சாம்பியன்ஷிப்பிற்கான பி குழுவில் மாலத்தீவுகள், லெபனான், வங்கதேசம் மற்றும் பூட்டான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது. ஏ பிரிவில் பாகிஸ்தான், நேபாளம், குவைத், இந்தியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா தனது இரண்டாவது போட்டியில் நேபாளத்தை எதிர்கொள்கிறது.