அர்ஜெண்டினாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி குராக்கோவுக்கு எதிராக நடந்த போட்டியில் தனது நாட்டிற்காக தனது 100 வது சர்வதேச கோலை அடித்துள்ளார். சர்வதேச அளவில் 100 கோல்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 


குரோக்காவுக்கு எதிரான போட்டியில் 20வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடித்து அர்ஜெண்டினா அணி 1-0 என முன்னிலை பெற்றதுடன் மெஸ்ஸியும் தன்னை உலக சாதனைப் பட்டியலில் இணைத்துக் கொண்டார். இதன் பின்னர் அவர் அவர் தனது 101வது மற்றும் 102வது கோல்களை 33வது மற்றும் 37வது நிமிடத்தில் அடித்து முதல் பாதியில் ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்தார்.


சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸி மூன்றாவது இடத்தில் உள்ளார், இதில் போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் கிரிஸ்டியானோ ரொனால்டோ 122 கோல்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். அதன் பின்னர் ஈரனின் அலி டேய் 109 கோல்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். இதன் பின்னர், மூன்றாவது இடத்தில் தான் மெஸ்ஸி உள்ளார். மெஸ்ஸி தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் விளையாடுவார் என்பதால், தனது கோல் கணக்குகளை இன்னும் அதிகரிக்க அவருக்கு வாய்ப்புகள் உள்ளது எனலாம். 


கடந்த ஆண்டு இறுதியில் கத்தாரில் பரபரப்பாக நடைபெற்ற கால்பந்தாட்ட உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரான்சை வீழ்த்தி மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.


உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட மெஸ்ஸி தனது கடைசி உலகக்கோப்பை தொடரிலாவது, கோப்பையை கைப்பற்றுவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விறுவிறுப்பான போட்டியில் சிறப்பான பங்களிப்பு அளித்து கோப்பையை கைப்பற்றினார் மெஸ்ஸி. மைதானத்தில் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோரும், தொலைக்காட்சி மற்றும் இணையம் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களும் இந்த போட்டியை கண்டுகளித்தனர்.


இந்த போட்டிக்கு பிறகு கோல்டன் பூட் விருது எம்பாப்பேவுக்கும், தொடர் நாயகனுக்கான கோல்டன் பால் விருது அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. அதேபோல், சிறந்த கோல்கீப்பருக்கான கோல்டன் கிளௌவ் விருது அர்ஜெண்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ்க்கு வழங்கப்பட்டது.


இதையடுத்து, கடந்த ஆண்டு கால்பந்தில் சிறப்பாக பங்காற்றிய சிறந்த வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் கோல் கீப்பர்கள் பெயர்கள் ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டி ஃபுட்பால் அசோசியேஷன் ( ஃபிபா) பரிந்துரைக்கப்பட்டது. 


இந்த வாக்கெடுப்பில் ஃபிபா அமைப்பின் 211 உறுப்பு நாடுகள், பத்திரிக்கையாளர்கள், கேப்டன்கள், அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் வாக்களித்தனர். 


சிறந்த ஃபிபா ஆடவர் வீரருக்கு இறுதி பட்டியலில் பிரான்சின் எம்பாப்பே, கரின் பென்சிமா  மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் தேர்வானவர்கள். வாக்குகளின் அடிப்படையில் எம்பாப்பே மற்றும் கரின் பென்சிமா ஆகியோரை தோற்கடித்து அர்ஜெண்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஃபிபா சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம், சிறந்த வீரருக்கான ஃபிபா விருதை லியோனல் மெஸ்ஸி 7வது முறையாக பெற்றார்.