மொரோக்கோ அணிக்கு எதிரான நட்பு ரீதியாக போட்டியில் நேற்று பிரேசில் அணி களமிறங்கியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக, கடந்தாண்டு டிசம்பர் 29 ம் தேதி மறைந்த கால்பந்து ஜாம்பவானான பீலேவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 






கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பிரேசில் அணியை சேர்ந்த ஒவ்வொரு வீரரும் தங்கள் எண்ணின் கீழ் "பீலே" என்ற பெயரை முத்திரையாக பதித்திருந்தனர். இந்த போட்டியில் காயத்தால் அந்த அணியின் கேப்டன் நெய்மர் இல்லாததால், அவருக்கு பதிலாக ரோட்ரிகோ கேப்டனாக களமிறங்கினார்.  இதையடுத்து, 10 நம்பர் ஜெர்சியை ரோட்ரிகோ தனது வாழ்க்கையில் முதல்முறையாக அணிந்தார். 


பீலேவுக்கு மரியாதை:


2022 கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய மொரோக்கோ அணிக்கு எதிராக பிரேசில் அணி இந்தாண்டு முதல்முதலாக களமிறங்கியது. இந்த போட்டியின்போது பிரேசிலிய கால்பந்து கூட்டமைப்பு பீலேவுக்கு அஞ்சலி செலுத்துவதாக அறிவித்தது. பீலேவின் புகழை நினைவு படுத்தும் விதமாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பீலேவின் புகைப்படங்கள் மைதானத்தில் இருந்த திரையில் காட்டப்பட்டது. தொடர்ந்து, ஒவ்வொரு வீரரும் தங்கள் எண்ணின் கீழ் "பீலே" என்ற பெயரை அணிந்து கொண்டு, தங்கள் மரியாதை செலுத்தினர். 






பிரேசிலின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் ரமோன் மெனெசஸ், கேப்டன் நெய்மர் ஜூனியருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, நேற்று நடந்த போட்டியில் ரோட்ரிகோவுக்கு 10ம் நம்பர் எண் கொண்ட ஜெர்சியை வழங்க முடிவு செய்தார். இதையடுத்து ரோட்ரிகோ இதை மிகப்பெரிய கவுரவமாக கருதினார். 


இதுகுறித்து அவர் பேசுகையில், “ பிரேசில் இன்று உலகம் முழுவதும் அறிவதற்கு முக்கிய காரணமே பீலேதான். அவருக்கு என் நன்றி கலந்த அஞ்சலி. பீலே மற்றும் நெய்மருக்கு பிறகு 10 ம் நம்பர் எண் கொண்ட ஜெர்சியை அணிவது எனக்கு மிகப்பெரிய பெருமை. 






கடந்த 2019 ம் ஆண்டு சாண்டோஸ் கிளப் அணியிலிருந்து ரியல் மாட்ரிடில் அணியில் இணைந்தபோது பீலேவை சந்தித்து பேசினேன். நாங்கள் இருவரும் கால்பந்தை பற்றி பேசினோம். அந்த சந்திப்புக்கு பிறகு அவர் மீதான மரியாதை பல மடங்கு கூடியது.” என்று தெரிவித்தார். 


2022 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு பிரேசில் அணி நேற்று முதல்முறையாக மொரோக்கோ அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பிரேசில் அணி மொரோக்காவிடம் 1-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.