Lionel Messi Bodyguard: கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் மெஸ்ஸி உடன் இருக்கும், அவரது பாடிகார்டான யாசின் சூகோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


மெஸ்ஸியும், பாதுகாவலரும்..!


அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பெரும் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸிக்கு,  உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் மீது அலாதியான அன்பு கொண்டுள்ள ரசிகர்கள், மெஸ்ஸியை நேரில் கண்டு அவரை ஆரத்தழுவ வேண்டும் என எண்ணி பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.  எனவே,  அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தனிப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ள யாசின் சூகோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.






இணையத்தில் வைரலகும் விடியோ:


Reddit தளத்தில் பதிவிடப்பட்டுள்ள சூகோ தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. போட்டியின் போதும், பொதுவெளிகளிலும் மெஸ்ஸியை அவரது ரசிகர்கள் மற்றும் கூட்டத்திலிருந்து பாதுகாக்கும் பணியின் போது, சூகோ எப்படி செயல்படுகிறார் என்பதை அந்த வீடியோ காட்டுகிறது. அதோடு, ரசிகர்கள் யாரையும் காயப்படுத்தாத வகையில், ஓடிச்சென்று அவர்களை அணைத்து பிடித்து மெஸ்ஸியிடம் இருந்து விலக்கி செல்கிறார். அவரது இந்த தன்மையான நடவடிக்கையையும், மெஸ்ஸியை பாதுகாக்க வேண்டும் என்பதில் அவரது உறுதிப்பாட்டயும் தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.


யார் இந்த யாசின் சூகோ?


இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, யாசின் சூகோ ஒரு முன்னாள் அமெரிக்க சிப்பாய் ராணுவ வீரராவார்.  அவர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் கடற்படை விரராக பணியாற்றியுள்ளார். இண்டர் மியாமி கால்பந்தாட்ட கிளப் அணியின் தலைவர் டேவிட் பெக்காமின் தனிப்பட்ட பரிந்துரையின் பேரில், மெஸ்ஸியை பாதுகாக்க சூகோ பணியமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆடுகளத்திற்கு வெளியே அருகிலேயே இருந்து பாதுகாப்பதும், போட்டியின் போது மெஸ்ஸியை உன்னிப்பாக கவனித்து அவரை நோக்கி வரும் ரசிகர்களை தடுப்பதும் சூகோவின் பிரதான வேலையாகும். இதனால், மியாமி கேப்டனான மெஸ்ஸியை நெருங்க முயற்சிக்கும் எந்த ஒரு நபரையும்,  தடுக்க சூகோவிற்கு அதிகாரம் உண்டு.






சூகோ மெஸ்ஸியை போட்டிகளுக்கு முன்னும் பின்னும் பாதுகாக்கிறார். அதே போல் ஷாப்பிங் பயணங்கள் போன்ற அவரது குடும்பத்தினருடனான வெளியூர் பயணங்களின் போது சூகிஓ உடனிருக்கிறார். அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் 7,68,000 ஃபாலோவர்களுடன் பிரபலமாக உள்ளார்.  அங்கு அவர் முதன்மையாக தனது குத்துச்சண்டை மற்றும் தற்காப்புக் கலை பயிற்சி விதிமுறைகளை விவரிக்கும் வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார். சூகோ பல மார்ஷியல் ஆர்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.