வரலாற்றில் முதல் முறையாக யூரோ கோப்பையில் ஒரு கோல் கூட அடிக்காமல் தொடரைவிட்டு வெளியேறினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.


யூரோ 2024 கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நாக் அவுட் போட்டிகள் நடைபெறுகின்றன. நேற்று (ஜூலை 5) நடைபெற்ற முதல் கால் இறுதி போட்டியில் ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகள் விளையாடின. இதில் ஸ்பெயின் அணி ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.


இதன் மூலம் அந்த அணி முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது கால் இறுதி போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான பேச்சுகள் மற்றும் கிலியன் எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் அணிகள் விளையாடின. இதில் பெனால்டி ஷாட்அவுட்  மூலாம் 5- 3 என்ற கணக்கில் பிரான்சு அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. பேர்ச்சுகல் அணியின் இந்த தோல்வியால் அந்த அணி யூரோ கோப்பையில் இருந்து வெளியேறியது. 


வரலாற்றில் முதல் முறையாக கோல் அடிக்காத ரொனால்டோ: 


கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இந்த யூரோ கோப்பை தான் கடைசி யூரோ தொடராக இருக்கும். இதனால் இந்த தொடரில் இவரது ஆட்டத்தை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் மைதானங்களில் கூடினார்கள். ஆனால் ரொனால்டோ இந்த தொடர் முழுவதும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதுவரை இதுபோன்ற சர்வதேச கால்பந்து தொடர்களில் அவர் கோல் அடிக்காமல் இருந்ததே இல்லை. சர்வதேச கால்பந்து தொடரில் ஒரு கோல் கூட அடிக்காத முதல் தொடராக இந்த யூரோ கோப்பை அவருக்கு அமைந்து விட்டது. 


39 வயதாகும் ரொனால்டோவிற்கு இதுவே கடைசி யூரோ கோப்பை என்பதால் அவர் ஒரு கோல் கூட எடுக்காமல் தொடரை விட்டு வெளியேறியிருப்பது ரசிகர்களிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் விளையாடிய சர்வதேச கால்பந்து தொடர்களில் இதுவரை 130 கோல்களை ரொனால்டோ அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இது தொடர்பாக ரொனால்டோ பேசுகையில், “சந்தேகமே வேண்டாம் இது தான் என்னுடைய கடைசி யூரோ தொடர். இது உணர்ச்சிவசப்படுவதற்கான நேரம் இல்லை. கால்பந்து தரும் எல்லாவற்றாலும் நான் ஈர்க்கப்பட்டேன். ரசிகர்கள் எனக்கு உற்சாகம் அளித்து வருகின்றனர். ஒரு குடும்பம் இங்கே இருக்கிறது. வேறு என்ன வேண்டும். நான் சாதிக்க வேண்டிய எல்லாவற்றையும் சாதித்து விட்டேன்” என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார்.