கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார் மெஸ்ஸியைப் பற்றிய அறிமுகம் தேவை இல்லை, கால்பந்து என்றாலே அதனை வாழ்நாளிலேயே பார்க்காதவர்கள் கூட மெஸ்ஸியை அறிந்திருப்பார்கள். முதல் அரையிறுதியில் குரோஷியாவை 3-0 என்ற கணக்கில் வென்று 2022 FIFA உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு அர்ஜென்டினாவை இழுத்துச்சென்றுள்ள மெஸ்ஸி இந்த தொடரில் ஐந்து கோல் அடித்து கோல்டன் ஷூ வாங்கும் பட்டியலில் முன்னிலையில் உள்ளார். தன் சார்பாக அர்ஜென்டினா அணிக்கு கோப்பை பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கில் விளையாடி வரும் அவர் கோல்டன் ஷூ-வும் வாங்கிவிட்டால் அவரது ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது. 


'தேங்க் யூ கேப்டன்'


மெஸ்ஸி அர்ஜென்டினாவின் முக்கிய வீரராக போட்டியில் அணியின் ஒட்டுமொத்த ஆதிக்கத்திற்கு காரணமாக இருந்து வருகிறார். ஆல்வரெஸ் என்னதான் நான்கு கோல்கள் அடித்திருந்தாலும் அது மெஸ்ஸி இல்லாமல் சாத்தியம் இல்லை. அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிறகு, மெஸ்ஸி ஒரு நிருபருடன் நேர்காணலில் இருந்தபோது அனைவரையும் உருக்கும் நிகழ்வு நடந்தது. அந்த நிருபர் 'தேங்க் யூ கேப்டன்' என்று கூற நெகிழ்ந்து போனார் மெஸ்ஸி.



மெஸ்ஸியை புகழ்ந்த நிருபர்


"கடைசியாக நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது… இது ஒரு கேள்வி அல்ல! ஆனால் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரப்போகிறது, நிச்சயமாக அர்ஜென்டினா ரசிகர்கள் அனைவரும் கோப்பையை வெல்லதான் விரும்புகிறோம். முடிவுகள் எதுவாக இருந்தாலும், உங்களிடமிருந்து யாராலும் எடுக்க முடியாத ஒன்று உள்ளது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், மேலும் நீங்கள் அர்ஜென்டினாவில் உள்ள ஒவ்வொருவருக்குள்ளும் எதிரொலிக்கிறீர்கள்", என்றார். 


தொடர்புடைய செய்திகள்: வாள்.. லிவ்-இன் உறவு.. துண்டாய் வெட்டப்பட்ட காதலி..கேரளாவில் ஒரு டெல்லி சம்பவம்.. பதறவைத்த கொடூரம்


கோப்பைக்கும் அப்பாற்பட்டது


அவர் பேச பேச மெஸ்ஸி புன்னகைத்த நிலையில், மேலும் பேசிய நிருபர், "நான் ஆர்வமாக இருக்கிறேன், யார்தான் இல்லை… ஆனால் நீங்கள் உருவாக்கியுள்ள இந்த உணர்வு, அது மெய்யோ, பொய்யோ, கற்பனையோ, அதை விட சிறந்தது எதுவும் இல்லை. உண்மையாகவே, நீங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் உங்கள் முத்திரையைப் பதித்துள்ளீர்கள். அது எனக்கு உலகக் கோப்பையை வெல்வதற்கும் அப்பாற்பட்டது. அதை உங்களிடமிருந்து யாரும் எடுக்க முடியாது. நீங்கள் நிறைய பேருக்கு மகிழ்ச்சியை கொண்டு வருவதற்காக நன்றி" என்று அவர் கூறினார். நிருபர் மெஸ்ஸியின் செயல்பாடுகளை பாராட்டிக்கொண்டிருந்தபோது, மெஸ்ஸியால் அவரது புன்னகையை அடக்க முடியவில்லை.



அர்ஜென்டினாவுக்காக கடைசி போட்டி


லியோனல் மெஸ்ஸி அதற்கு பதிலளிக்கையில், "வரும் ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி தான் அர்ஜென்டினா சட்டையை அணியும் கடைசி முறையாக இருக்கும்" என்றும் மெஸ்ஸி கூறினார். மெஸ்ஸி உலகில் உள்ள அனைத்து கால்பந்து கோப்பைகளையும் வென்றுள்ளார், FIFA உலகக் கோப்பை மட்டுமே அவரை ஏமாற்றும் ஒரே கோப்பையாக உள்ளது. டிசம்பர் 18 அன்று, கத்தாரில் நடந்து வரும் மெகா நிகழ்வின் பைனலில் அர்ஜென்டினா பிரான்சை எதிர்கொள்ளும்போது, மெஸ்ஸி அந்த குறையையும் தீர்ப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அர்ஜென்டினா 2014-ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கு வந்திருந்தது, ஆனால் அந்த ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தனர்.