FIFA WC 2022: அரையிறுதி போட்டிக்குப் பிறகு, பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்வே மொரோக்கோ அணியின் ஹகிமியை டேக் செய்து நெகிழ்ச்சியான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.  


உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நேற்று நடந்து முடிந்தது. அதில், பிரான்ஸ் அணி மொரோக்கோ அணியை 2 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் பிரான்ஸ் அணி வீரர்கள் ஒருபுறம் துள்ளிக்குதித்துக் கொண்டு இருக்க, அந்த அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்வே மட்டும் மொரோக்கோ அணியின் நட்சத்திர வீரர், அச்ரஃப் ஹகிமியை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிக்கொண்டு இருந்தார். அதன் பின்னர், இருவரும் தங்களது ஜெர்ஸியை மாற்றிக்கொண்டனர். இந்த நிகழ்வு, முடிந்த பின்னர் தான் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில், மொரோக்கோ அணியின் ஜெர்ஸியை அணிந்தபடி கலந்து கொண்டார்.






போட்டி முடிந்த பின்னர், பிரான்ஸ் அணியின் எம்பாப்வே தான் ஹகிமியை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறும் படத்துடன் நெகிழ்ச்சியான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “கவலைப்படாமல் இருங்கள் சகோ! அனைவரும் உங்களை நினைத்து பெருமைப்படுகிறார்கள், நீங்கள் ஒரு வரலாற்றினை உருவாக்கியுள்ளீர்கள்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பதிவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். 


மொரோக்கோ அணிதான் இதுவரை நடைபெற்றுள்ள 22 உலகக்கோப்பை போட்டிகளில் அரையிறுதிவரை வந்த முதல் ஆப்ரிக்க அணி ஆகும். இதனை குறிக்கும் வகையிலேயே எம்பாப்வே ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணிக்கு, காத்திருப்பது மேஜிகல் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி. உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் மீண்டும் ஒரு சுவாரஸ்யமான இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர்,18) இரவு 8.30 மணிக்கு லுசைல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இறுதிப் போட்டிக்கான முன்னேற்பாடுகள் கத்தாரில் மிகவும் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதற்கு முன்னதாக மூன்றாவது இடத்துக்கான போட்டி சனிக்கிழமை (டிசம்பர்,17) நடைபெறவுள்ளது. அதில் குரோஷிய அணியும் மொரோக்கோ அணியும் மோதவுள்ளன.