அமெரிக்காவின் இண்டர் மியாமி அணியில் கால்பந்தாட்ட நட்சத்திர வீரரான மெஸ்ஸி இணைந்ததை, அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இண்டர் மியாமியில் மெஸ்ஸி:


அர்ஜெண்டினா கால்பந்தாட்ட அணியின் கேப்டனும், தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவருமான மெஸ்ஸி, அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் அணியான இண்டர் மியாமியின் இணைந்ததாக அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரான்சை சேர்ந்த பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணிக்காக கடந்த இரண்டு சீசன்களாக விளையாடி வந்த மெஸ்ஸி, தற்போது 2025ம் ஆண்டு மேஜர் லீக் சாக்கர் தொடரின் இறுதி வரை இண்டர் மியாமி அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். இதனை அந்த அணி நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.






ரூ.492 கோடி ஊதியம்:


இண்டர் மியாமி அணியில் மெஸ்ஸியை இணைக்க 3 ஆண்டுகாலமாக நடந்து வந்த பேச்சுவார்த்தையின் முடிவில், இறுதியாக அவருடனான ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது என இண்டர் மியாமி அணி தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஆண்டிற்கு 492 கோடி ரூபாய் வரையில் மெஸ்ஸி ஊதியமாக பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள மெஸ்ஸி, “இன்டர் மியாமி மற்றும் அமெரிக்காவில் எனது வாழ்க்கையின் இந்த அடுத்த கட்டத்தை தொடங்குவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இது ஒரு அருமையான வாய்ப்பு மற்றும் இந்த அழகான திட்டத்தை நாங்கள் தொடர்ந்து இணைந்து  வலுவாக்குவோம். நாங்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைய ஒன்றாகச் செயல்படுவதே திட்டமாகும். மேலும் எனது புதிய வீடான் இந்த அணிக்காக உதவத் தொடங்க நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.


முதல் போட்டி:


நடப்பாண்டு மேஜர் லீக் சாக்கர் தொடர் மூலம் இண்டர் மியாமி அணிக்காக களமிறங்கும் மெஸ்ஸி, வரும் 21ம் தேதி அன்று மெக்சிகனை சேர்ந்த க்ரூஸ் அஜுல் அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் களமிறங்க உள்ளார். அதுவும், அவரது ஐகானிக் 10வது நம்பர் ஜெர்சியுடன் களமிறங்க உள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


ரூ.8000 கோடி வேண்டாம் - மெஸ்ஸி:


தனது கால்பந்தாட்ட காலத்தின் பெரும்பகுதியை பார்சிலோனா அணியில் தான் மெஸ்ஸி கழித்தார். இருப்பினும் கடந்த 2021ம் ஆண்டு அந்த அணியில் இருந்து விலகி, கடந்த 2 வருடங்களாக பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வந்தார். இந்த நிலையில் கிளப் நிர்வாகத்தின் அனுமதியின்றி, அண்மையில் மெஸ்ஸி சவுதி அரேபியாவிற்கு சென்று வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைதொடர்ந்து தான், 5 வாரங்களுக்கு முன்பாக அவர் பிஎஸ்ஜி அணியில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார். அதேநேரம், சவுதி அரேபியாவை சேர்ந்த அல் ஹிலால்  கால்பந்து அணி, மெஸ்ஸிக்கு ஆண்டிற்கு ஒரு பில்லியன் டாலர்களை வழங்க முன்வந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை நிராகரித்து விட்டு, இண்டர் மியாமி அணியில் இணைவதாக அறிவித்தார். அந்த முடிவு தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.


அசத்தல் சாதனை:


பார்சிலோனா அணிக்காக 21 ஆண்டுகளாக விளையாடி வந்த மெஸ்ஸி 672 கோல்களுடன், 10 லா லிகா சாம்பியன் பட்டங்களையும், நான்கு சாம்பியன்ஸ் லீக் மற்றும் ஏழு ஸ்பானிஷ் கோப்பைகளை வென்றார். அதைதொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு பிஎஸ்ஜி அணியில் இணைந்த மெஸ்ஸி, 75 போட்டிகளில் பங்கேற்று 32 கோல்களை அடித்தார். அந்த வரிசையில் மூன்றாவது கிளப் அணியாக தற்போது இண்டர் மியாமி அணியில் மெஸ்ஸி இணைந்துள்ளார்.