கால்பந்து பற்றி ஒரு அணு அளவு கூட தெரியாத நபர்களிடம் கால்பந்து பற்றி கேட்டால், அவர்கள் உச்சரிக்கும் வீரர்களில் மெஸ்ஸியும், ரொனால்டோவும் இருப்பர். இந்த இரு வீரர்கள் கால்பந்தை கடந்து உலகம் முழுவதும் அவ்வளவு புகழ் பெற்றவர்கள்.
தமிழ் சினிமாவில் தற்போது ஏதாவது ஒரு பிரபலங்கள் ட்ரெண்டிங்கில் இருந்தால் அவர்களிடன் கேட்கப்படும் ஒரே கேள்வி, நீங்கள் அஜித் ரசிகரா? அல்லது விஜய் ரசிகரா? அதுபோல், கிரிக்கெட்டில் சச்சினா? தோனியா? இப்படி கேள்விகள் அடுக்கப்படும்போது, பல ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே, கால்பந்து என்றால் மெஸ்ஸி or ரொனால்டோ.
தற்போது, நடந்து முடிந்த உலகக் கோப்பைக்கு முன்பிலிருந்து மெஸ்ஸி, ரொனால்டோ பெயர் கொடிக்கட்டி பறக்க தொடங்கி விட்டது. அப்படி இருக்க, பீலே, மரொடோனா, ரொனால்டினோ உள்ளிட்ட பல கால்பந்து ஜாம்பவான்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் அதிகம் கேட்கப்பட்டவை மெஸ்ஸி or ரொனால்டோ.
இவர்களில் பெரும்பாலோனோர் சொல்லும் ஒரே பதில் மெஸ்ஸிதான். இவர்களில் மரொடோனா ஒருபடி மேலே சென்று என் கால்பந்து வாரிசு மெஸ்ஸிதான் என்று குறிப்பிட்டு இருந்தார். இப்படி உலகையே தன் பெயரை உச்சரிக்க செய்த மெஸ்ஸி இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இப்படி உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னும், பின்னும் மெஸ்ஸி.. மெஸ்ஸி என்ற குரல் உலகம் முழுவதும் ஒலித்தாலும், இந்த இடத்திற்கு வர மெஸ்ஸிக்கு பல அவமானங்களை கடக்க வேண்டியிருந்தது.
பெரும்பாலும் உருவகேலியால் பலரும் தங்கள் வாழ்க்கை கனவுகளை தொலைத்த கதைகள் பல உண்டு. அப்படி இருக்க, உயரம் குறைவாக இருந்த காரணத்தினால் மெஸ்ஸி தனக்கு பிடித்த கால்பந்து விளையாட்டை இழக்க நேரிட்டது. அவற்றை ஒரு குட்டி ரீ- வைண்டாக பார்க்கலாம்.
மெஸ்ஸி என்னும் லியோனல் ஆண்ட்ரே மெஸ்ஸி கடந்த 1987, ஆண்டு ஜூன் 24ம் தேதி அர்ஜெண்டினாவில் உள்ள ரொசாரியோவில் பிறந்தவர். பிறந்தது முதலே தன்னை அறியாது கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட மெஸ்ஸி, குள்ளமாக இருந்த காரணத்தினால் எந்தவொரு பயிற்சியாளரும் தனது அணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. இதையடுத்து, அவரின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸிதான் முதல் பயிற்சியாளராக இருந்தார்.
இதைப்பார்த்த மெஸ்ஸியின் பாட்டி செலியா, மெஸ்ஸியின் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு பல பயிற்சியாளர்களிடம் கெஞ்சி கால்பந்து அணியில் சேர்த்துவிட்டார். குடும்ப சூழ்நிலை காரணமாக, மெஸ்ஸி ஷு இல்லாமல் விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை கண்ட செலியா பாட்டி, உறவினர்களிடம் கடன் வாங்கி மெஸ்ஸிக்கு ஷூ வாங்கி கொடுத்துள்ளார்.
தடைப்பட்ட வளர்ச்சி:
இத்தனை தடைகளையும் தாண்டி மெஸ்ஸியின் கால்பந்து வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருந்தது அவரது உயர வளர்ச்சிதான். ஹார்மோன் குறைபாட்டால், அவரது வளர்ச்சி தடைப்பட்டு விட்டது என்றும், மெஸ்ஸி வளர்வது கடினம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை எதையும் தனது மனதிற்கு எடுத்து செல்லாத மெஸ்ஸி, தனது காலுக்கு கீழ் வரும் பந்துகளை, தடைகளுடன் சேர்த்து கோல்களாக மாற்றினார். எதிரணியில் விளையாடும் சிறுவர்களின் திறமைகளை ஒட்டுமொத்தமாக பெற்றதுபோல் மெஸ்ஸி, அசால்டாக கோல் அடித்து அசத்தினார். இதை பார்த்த மெஸ்ஸியின் சிறுவயது பயிற்சியாளர் மிரண்டே போயிருக்கிறார். தனது 9 வயதிலேயே பல வெற்றிகளை குவித்த மெஸ்ஸி, தொடர்ந்து கால்பந்து உலகில் தன்னை யார் என்று வெளிப்படுத்த தொடங்கினார்.
இந்தநிலையில், மெஸ்ஸியின் திறமையை அறிந்துகொண்ட ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா கால்பந்து அணி, அவரது வளர்ச்சிகாக மருத்துவ செலவினை ஏற்றது. இதனால், கடந்த 2004ம் ஆண்டு பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி அறிமுகமாகி, எஸ்பான்யோல் அணிக்கு எதிராக தனது முதல் கோலை பதிவு செய்து அசத்தினார். மெஸ்ஸி ஒவ்வொரு முறை கோல் அடித்தபிறகும் இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்துவார். தற்போது வரை அந்த டெடிகேட் தான் கால்பந்து போட்டியில் வளர முக்கிய காரணமாய் இருந்த தனது பாட்டிக்குதான்.
உலகக் கோப்பை தோல்வியும், எழுந்த விமர்சனமும்...
கால்பந்து போட்டியில் மெஸ்ஸி ஜாம்பவானாக கருதப்பட்டாலும் உலகக் கோப்பையை அவர் வெல்லாததால் மெஸ்ஸி மீதான விமர்சனம் நாளுக்குநாள் நீண்டது. 2014ம் ஆண்டு ஜெர்மனிக்கு எதிரான இறுதிப்போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி தோல்வியை சந்தித்தது. அதை தொடர்ந்து 2022 ம் ஆண்டு அர்ஜெண்டினா அணி லீக் சுற்றில் சவுதி அரேபியாவிடம் தோல்வியடைந்தது வரை துரத்தியது. ராசியில்லாத மெஸ்ஸி என்ற பெயரை தனக்கு சாதகமாக மாற்றி 2022ம் ஆண்டு உலகக் கோப்பையை முத்தமிட்டார்.