FIFA WORLDCUP 2022: பிரான்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுலை வெளியிட்டு கெளரவித்துள்ளது.
இந்த டூடுலை அனிமேட் செய்து வெளியிட்டுள்ளது. ஆரம்பம் முதல் அக்ரசிவாக விளையாடிய மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி வலிமையான பிரான்சை வீழ்த்தி 36 வருடங்களுக்குப் பிறகு உலககோப்பையை வென்றது.
22வது உலகக்கோப்பை போட்டி கத்தாரில் லூசைல் மைதானத்தில் டிசம்பர் 18ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதில், கால்பந்து விளையாட்டின் மிரட்டல் நாயகன் மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவும் நடப்புச் சாம்பியன் பிரான்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. போட்டியின் ஆரம்பம் முதலே மிகவும் அக்ரசிவ் மோடில் விளையாடிய அர்ஜெண்டினா அணி களத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அர்ஜெண்டினா என முழங்கிக்கொண்டு இருக்க அர்ஜெண்டினாவின் ஆதிக்கம் மேலும், அதிகரித்தது.
போட்டியின் 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக்கினை மிகவும் சரியாக பயன்படுத்திக்கொண்ட அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி சிறப்பாக கோல் அடித்து தனது அணியின் கோல் கணக்கினை தொடங்கி வைத்தார். இதன் மூலம் கோல்டன் பூட் போட்டியில் பிரான்ஸின் எம்பாப்வேவை பின்னுக்குத் தள்ளி முன்னிலை வந்தார். அவர் இந்த கோலுடன் 6வது கோல் அடித்தார்.
முதல் பாதியில் அசத்தல்:
அதனைத் தொடர்ந்து அக்ரசிவாக விளையாடிய அர்ஜெண்டினா அணியின் வீரரகளில் ஏஞ்சல் டி மரியா போட்டியின் 36வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்கு இரண்டாவது கோலினை ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அடித்து பிரமிக்க வைத்தார். இதன் மூலம் அர்ஜெண்டினா அணி 2 - 0 என முன்னிலை வகித்தது. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தனது அணிக்காக அவர் கோல் அடித்த உற்சாகத்தினை ஆனந்த கண்ணீர் சிந்தி வெளிப்படுத்தினார். போட்டியின் முதல் பாதியில் அர்ஜெண்டினா அணி 2 - 0 என முன்னிலை வகித்தது.
ஆட்டத்தை மாற்றிய எம்பாப்பே
அதன் பின்னர் இரண்டவது பாதியில் ஆட்டம் முற்றிலும் அர்ஜெண்டினா பக்கம் இருக்க, 80வது நிமிடத்தில் கிடைத்த சிறப்பான வாய்ப்பான பெனால்டி ஷாட்டினை சாதூர்யமாக பயன்படுத்திய எம்பாப்வே கோலாக மற்றி பிரான்ஸ் அணிக்கு ஆறுதல் அளிக்க ஆறுதலால் அணி மூச்சு விட்டுக்கொண்டு இருக்கும்போதே, 81வது நிமிடத்தில் எம்பாப்வே காற்றில் வந்த பந்தை அட்டகாசமாக கோலாக மாற்றினார். இதனால் ஒட்டுமொத்த பிரான்ஸ் அணியும் போட்டிக்குள் வந்ததது. போட்டி 2 - 2 என்ற கணக்கில் டிராவாக இருக்க இரண்டாவது பாதி ஆட்டம் முடிந்தது. நார்மல் எக்ஸ்ட்ரா டைமில் மேற்கொண்டு எந்த அணியும் எடுக்காததால், மேற்கொண்டு 30 நிமிடங்கள் எக்ஸ்ட்ரா டைம் வழங்கப்பட்டது.
அதில் முதல் 15 நிமிடங்களில் அர்ஜெண்டினா அணி அடிக்க முயன்ற கோல்களை மிகவும் சிறப்பான முறையில் பிரான்ஸ் வீரர்கள் தடுத்து உலகத்தரமான தடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியது. ஆனால் அதன் அடுத்த 15 நிமிடங்களின் தொடக்கம் முதலே துடிப்புடன் விளையாடிய அர்ஜெண்டினா அணியினர் சிறப்பான கூட்டு முயற்சியால் அணியின் கேப்டன், மேஜிகல் மெஸ்ஸி 108வது நிமிடத்தில் கோல் அடித்து அணியினை 3 - 2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கச்செய்ததுடன் போட்டியை தனக்கு சாதகமாகவும் மாற்றினார். இதனால் போட்டியின் முடிவில் அர்ஜெண்டினா அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வென்று உலகக்கோப்பை வென்று வரலாறு படைக்கும் என நினைக்கையில் போட்டியின் 118வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஷாட்டில் எம்பாப்வே கோல் அடித்து அதகளப்படுத்த போட்டி மீண்டும் 3 - 3 என சமன் ஆனது. இந்த கோலின் மூலம் எம்பாப்வே உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அதகளப்படுத்தினார்.
பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி:
அதன் பின்னர் போட்டி பெனல்டி ஷாட்டுக்கு சென்றது. இதனால் இரு அணிகாளுக்கும் தலா 5 பெனால்டி ஷாட்டுகள் வழங்கப்பட்டன. பெனால்டி ஷாட்டில் எம்பாப்வே முதல் கோல் அடிக்க, அதனைத் தொடர்ந்து மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார். அதன் பின்னர் வந்த இரண்டு பிரான்ஸ் வீரர்கள் சொதப்ப, இரண்டு அர்ஜெண்டினா வீரர்கள் கோல் அடித்தனர். இதனால் போட்டி பெனால்டி ஷாட்டில் அர்ஜெண்டினா அணி 3 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அடுத்த ஷாட்டை பிரான்ஸ் வீரர் கோல் அடிக்க போட்டி 3 - 2 என ஆனது, ஆனால் அதன் பின்னர், அர்ஜெண்டினா வீரர் கோல் அடிக்க போட்டியை 4 - 2 என்ற கணக்கில் வென்று, 36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையை கைப்பற்றியது.