கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி பிரமாண்டமாய் நடைபெற்றது. அர்ஜெண்டினா - பிரான்ஸ் அணிகளில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உலக முழுவதும் உள்ள ரசிகர்களை தூண்டியது. பிரான்ஸ் அணியை அர்ஜெண்டினா அணி 4-2 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்தது பிரான்ஸ் அணி என்று கூறுவதை காட்டிலும் எம்பாப்பே என்று கூறுவதுதான் மிகச்சரியாக இருக்கும். பிரான்ஸ் அணிக்காக போட்டி நேரத்தில் அடிக்கப்பட்ட 3 கோல்களையும் எம்பாப்பே மட்டுமே அடித்திருந்தார்.
போட்டியின் இறுதிவரை தங்களது நாட்டிற்காக கோப்பையை கைப்பற்ற தீவிரமாக போராடிய எம்பாப்பே, பிரான்ஸ் அணி தோற்றதால் மைதானத்திலே சுக்குநூறாக நொறுங்கிவிட்டார். 23 வயதே ஆன ஒரு இளம் வீரர் மைதானத்தில் நொறுங்கிய தருணத்தில் கால்பந்து ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.
பிரான்ஸ் அணி இறுதிப்போட்டியில் தோல்வியை சந்திருந்தாலும் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணிக்கு பயம்காட்டிய எம்பாப்பேதான், இன்று ட்விட்டர் பக்கத்தில் மெஸ்ஸியைவிட அதிகளவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.
இந்தநிலையில், இதுவரை கைலியன் எம்பாப்பே பெற்ற சாதனையைகளையும், பெருமைகளும் என்னவென்று பார்க்கலாம்.
- 19 வயதில் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்
- 23 வயதில் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பங்கேற்பு
- 2022 ஃபிபா உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்து கோல்டன் பூட் வெற்றியாளர்
- ஃபிபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல்
- 2002 ம் ஆண்டு உலகக் கோப்பையில் ரொனால்டோவிற்குப் பிறகு 8க்கு அதிகமான கோல் அடித்த முதல் வீரர்
- ஒரு உலகக் கோப்பையில் 23 வயது மற்றும் அதற்கு குறைவான வயதில் அதிக கோல்கள்
- பங்கேற்ற இரண்டு உலகக் கோப்பையில் 12 கோல்கள்
- 2 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகள்.
- 1 உலகக் கோப்பை வெற்றியாளர்
- ஆண்கள் உலகக் கோப்பையில் 6வது அதிக கோல் அடித்தவர்
உலகக் கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்குபிறகு மைதானத்திலே உடைந்து அழுத எம்பாப்பேவை சக வீரரைப் போல அருகிலே அமர்ந்து பிரான்ஸ் அதிபர் மெக்ரோன் தேற்றினார். மேலும், வீரர்களுக்கான பரிசளிப்பு விழாவிலும் மேடையில் தங்களது நாட்டு வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்த பிரான்ஸ் அதிபர் மெக்ரேனுக்கு ஆறுதல் கூறி தேற்றினார். பிரான்ஸ் அதிபர் மெக்ரோன் தன்னுடைய நாட்டு வீரர்களுக்கு ஆறுதல் கூறியதற்காக அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதுதொடர்பாக, பிரான்ஸ் அதிபர் மெக்ரோன் கூறியதாவது, “ எம்பாப்பே ஒரு சிறந்த வீரர். அவர் மிகவும் இளமையான வீரர். நான் அவரிடம் கூறினேன். 24 வயதுதான் ஆகிறது. அவர்தான் உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்தவர். இதற்கு முன்பே உலகக்கோப்பையை வென்றுள்ளார். மற்றொரு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். எனக்கும் சோகமாகத்தான் உள்ளது. நான் அவரிடம் நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் என்று கூறினேன். நான் போட்டியின் முடிவில் தோற்றாலும் வெற்றியின் அருகில் சென்றோம். இதுதான் விளையாட்டு” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.