டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் கால்பந்தாட்ட வீரர் லியோ மெஸ்ஸியை உலகின் சிறந்தவர் என்றும், இந்த ஆண்டின் ‘சிறந்த விளையாட்டு வீரர்’ விருதை வெல்ல தகுதியானவர் என்றும் கூறியதற்கு மெஸ்ஸி உடனடியாக பதில் அளித்துள்ளார். 


இன்ஸ்டாகிராமில் நடாலின் பதிவை ரீஷேர் செய்துள்ள அவர் ரஃபேலின் வார்த்தைகளுக்கு நன்றி கூறியுள்ளார். ”நீங்கள் சிறந்த விளையாட்டு வீரர் என என்னைக் குறிப்பிட்டிருப்பது என்னை பேச்சவற்றனாக்கி உள்ளது. நன்றி @rafaelnadal, நீங்கள் உங்கள் களத்தில் செய்த சாதனைகளுக்காக இந்த விருதுக்குத் தகுதியானவர். நீங்கள் ஒரு வெற்றியாளர்” என மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார். 






மேலும் மெஸ்ஸி “ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் போட்டித்தன்மை நிறைந்தது. உண்மையிலேயே இந்த தன்மை நிறைந்த அனைவரும் @laureussport விருதுக்கு தகுதியானவர்கள்!!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக விளையாட்டுத்துறையில் முக்கிய விருதாகக் கருதப்படும் லாரஸ் உலக விளையாட்டு விருதுகளை வெல்வதற்கு லியோனல் மெஸ்ஸி தகுதியானவர் என்று ரஃபேல் நடால் பதிவு செய்திருந்தார். ரஃபேல் நடால் இந்த ஆண்டுக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.அது குறித்தத் தனது பதிவில், "இந்த ஆண்டின் லாரஸ் விளையாட்டு வீரர் விருதுக்கு மீண்டும் பரிந்துரைக்கப்பட்டதற்கு நன்றி.ஆனால் இந்த ஆண்டு அது மெஸ்ஸிக்குச் செல்ல வேண்டியது.அவர் அதற்குத் தகுதியானவர்." எனக் குறிப்பிட்டிருந்தார்.


முன்னதாக, கால்பந்தாட்ட உலகக்கோப்பையை அர்ஜெண்டினா அணி வெல்ல வேண்டும் என்ற கோடிக்கணக்கான ரசிகர்களின் விருப்பத்திற்கு ஒரே காரணமாக இருந்தவர் மெஸ்ஸி. 35 வயதான மெஸ்ஸி இதுவரை கால்பந்தில் படைக்காத சாதனைளே இல்லை என்று சொல்லுமளவிற்கு சிறந்த வீரருக்கான விருது உள்பட ஏராளமான விருதுகளை வென்று படைத்துள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். இதற்கு முன்பு விளையாடிய 4 உலகக்கோப்பையிலும் சேர்த்து 6 கோல்கள் மட்டுமே அடித்திருந்தார்.


சாதனை படைத்த மெஸ்ஸி:


இந்நிலையில் தான், நடப்பாண்டில் கத்தாரில் நடைபெற்ற கால்பந்தாட்ட உலகக்கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில், மெஸ்ஸி  7 கோல்களை அடித்து அசத்தினார். இதன் காரணமாக தங்க கால்பந்து விருது வென்ற மெஸ்ஸி, 92 ஆண்டுகால உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில், சிறந்த வீரருக்கான கோல்டன் பாலை ( தங்க பந்து) இரு முறை வென்ற ஒரே வீரர் மற்றும் முதல் வீரர் என்ற புதிய வரலாற்றை மெஸ்ஸி படைத்துள்ளார். இதற்கு முன்பாக, 2014ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி தங்கபந்து வென்று சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.