இந்தியாவில் கால்பந்து போட்டிகளுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. சமீபகாலமாக எந்த விளையாட்டாக இருந்தாலும் ஆண்கள் விளையாட்டை ரசிக்கும் அளவிற்கு, பெண்கள் விளையாட்டையும் ரசிகர்கள் ரசிக்கின்றனர். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் எந்த போட்டி நடத்தப்பட்டாலும், அதற்கு ரசிகர்கள் தங்களது பலத்த ஆதரவை எப்போதும் அளித்து வருகின்றனர்.


இந்தியா - நேபாளம்:


இந்த நிலையில், சென்னையில் இன்று சர்வதேச கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இந்திய மகளிர் அணியும், நேபாள மகளிர் அணியும் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. சென்னையில் 2007ம் ஆண்டுக்கு பிறகு நடைபெறும் சர்வதேச கால்பந்து போட்டி இதுவாகும். கடைசியாக ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிப்போட்டியாக இந்திய மகளிர் அணி – தென்கொரியா அணியிடம் மோதியது. அதற்கு பிறகு, சென்னையில் நடைபெறும் சர்வதேச மகளிர் கால்பந்து போட்டி இதுவே ஆகும்.





இதுமட்டுமின்றி, இன்று நேபாள அணிக்கு எதிராக களமிறங்கும் இந்திய மகளிர் அணிக்கு கேப்டனாக களமிறங்குவது தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனையான இந்துமதி கதிரேசன் ஆவார். 28 வயதான இந்துமதி கதிரேசன் தமிழ்நாடு காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளராக பொறுப்பு வகித்து வருகிறார். அதுமட்டுமின்றி இன்று நேபாள அணிக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியில் 4 தமிழக வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.


தமிழக வீராங்கனைகள்:


இந்துமதி கதிரேசன் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் கார்த்திகா அங்கமுத்து, செளமியா நாராயணசாமி, சந்தியா ரங்கநாதன் ஆகிய தமிழக வீராங்கனைகளும் களமிறங்குகின்றனர். இந்த போட்டி தொடர்பாக கூறிய இந்துமதி, தான் பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக ஆடினாலும், தற்போதுதான் முதல் முறையாக சென்னையில் விளையாடுகிறேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.




இன்று இந்திய அணிக்கு தலைமை தாங்கும் இந்துமதியின் பெற்றோர்கள் சாதாரண கூலித்தொழிலாளி ஆவர். இந்துமதியின் அபார திறமையை கண்ட அவரது பயிற்சியாளர் மாரியப்பன் அவரை பட்டைத் தீட்டினார். மாநில மற்றும் தேசிய அணிகளுக்காக பல முறை ஆடியுள்ளார். 32 ஆண்டுகால வரலாற்றில் தமிழ்நாடு மகளிர் அணி தேசிய அளவிலான மகளிர் கால்பந்து கோப்பையை 2017-2018ம் ஆண்டில் கைப்பற்றியபோது தமிழ்நாடு அணியின் முக்கிய வீராங்கனையாக இந்துமதி இருந்தார்.


அனுமதி இலவசம்:


இந்திய மகளிர் கால்பந்து கேப்டன் அசலதா தேவி காயம் காரணமாக ஆடாததால் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை இந்துமதி ஏற்றுள்ளார். போட்டி தொடர்பாக பேசிய இந்துமதி இரு அணிகளும் சம பலம் கொண்டவை. வெற்றி, தோல்வியை இரு அணிகளும் விளையாடும் விதம் தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார்.


மொத்தம் 2 போட்டிகள் இந்திய அணியுடன் நேபாள் மகளிர் அணி மோத உள்ளது. இந்த இரு போட்டிகளும் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது. முதல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. 2வது போட்டி வரும் 18-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டி இரு நாடுகள் இடையே நட்பு ரீதியாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியை நேரில் கண்டுகளிக்க ரசிகர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.