செவ்வாய்க்கிழமை ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் நடந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை கேரளா பிளாஸ்டர்ஸ் வீழ்த்தியது. நேற்றைய போட்டியில் பிறந்தநாள் கொண்டாடும் சென்னையின் எப்சி வீரர் அப்டே நாசர் எல் கயாதிக்கு சோகமே மிஞ்சியது.
சென்னை அணி தோல்வி
பிறந்தநாள் கொண்டாடும் வீரர் எல் கயாதி ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்திலேயே கோல் அடித்து உற்சாகத்தை கூட்ட, எல் காயதி குதூகலம் அடைந்தார். பிறந்தநாள் வீரரின் கால்களில் இருந்து வந்த முதல் கோலுடன் துவங்கிய சென்னை அணி வலுவான தொடக்கத்தை தந்தது. ஆனால் ஆட்டத்தின் 38 வது நிமிடத்தில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் அட்ரியன் லூனாவும், இரண்டாம் பாதியில் 64வது நிமிடத்தில் ராகுல் கேபியும் கோல்கள் அடிக்க கேரளா பிளாஸ்டர்ஸ் கம் பேக் கொடுத்து வெற்றியது தட்டிச்சென்றது.
பிளே-ஆப் வாய்ப்பு
இந்த தோல்வி சென்னையின் ப்ளே ஆஃப் நம்பிக்கைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இப்போது மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே மற்றும் பிளேஆஃப்களுக்கு தகுதி பெற முடியும். அதற்கும் மற்ற போட்டிகளின் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். மறுபுறம், பிளேஆஃப்களில் இடத்தை உறுதி செய்ய கேரளா பிளாஸ்டர்ஸுக்கு இன்னும் மூன்று புள்ளிகள் மட்டுமே தேவை.
சென்னையின் முதல் கோல்
ரசிகர்கள் ஸ்டாண்டில் வந்து அமர்ந்து செட்டில் ஆவதற்கு முன்பே சென்னை அணி முதல் கோல் அடித்து கையை ஓங்கியது. ஆனால் தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடும் மிட்ஃபீல்டர், எல் கயாதியின் புத்திசாலித்தனத்தை விட அந்த கோலுக்கு காரணம், கேரளா பிளாஸ்டர்ஸின் சென்டர்-பேக்குகளான ஹார்மிபம் மற்றும் விக்டர் மோங்கில் ஆகியோருக்கு இடையே தொடர்பு இல்லாததுதான் இலக்குக்கு செல்ல எளிதாக வழிவகுத்தது. பெட்டர் ஸ்லிஸ்கோவிச் பாக்ஸின் ஓரத்தில் இருந்த எல் கயாதிக்கு பந்தை அனுப்ப, இரண்டு சென்டர்-பேக்குகளுக்கிடையே இருந்த இடைவெளியை பயன்படுத்தி பந்தை இடதுபுறமாக தள்ளி, கோல் கீப்பரை வீழ்த்தி முதல் கோலை வெகு விரைவாக பதிவு செய்தார்.
கேரளாவின் இரு கோல்கள்
அதன்பிறகு, ஆட்டத்தில் கேரளா அணியே முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தியது. அட்ரியன் லூனா மற்றும் ராகுல் கேபி ஆகியோர் விரைவாக இரண்டு கோல்களை எடுத்ததால், சென்னை அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. 38வது நிமிடத்தில் லூனா கோல் அடித்து சமன் செய்ய பிளாஸ்டர்ஸ் தொடர்ந்த முயற்சி பலனளித்தது. சென்னையின் கேப்டன் அனிருத் தாபா பந்தை சென்னையின் பாக்ஸிலிருந்து க்ளியர் செய்ய முயற்சித்த நிலையில், அவரது கிளியரன்ஸ் லூனாவிடம் விழுந்தது. பின்னர், சென்னையின் கோல் கீப்பர் சாமிக் மித்ராவை வென்று அதனை கோலாக மாற்றி சமன் செய்தார். 64 வது நிமிடத்தில், நிஷு குமாரிடமிருந்து லூனா ஒரு விரைவான த்ரோ-இன் பெற்றபோது, அதிக ரிஸ்கில்லாத தூரத்தில் ராகுலை பாக்ஸுக்குள் காண, அவரிடம் பாஸ் செய்தார். சென்னையின் பாக்ஸ் நிரம்பியிருந்தாலும், அவர்களால் ராகுலின் கோலை தடுக்க முடியவில்லை. இரு கோல்கள் அடித்து முன்னிலையில் சென்றதும், சென்னைக்கு அழுத்தம் அதிகரித்தது. ஆனால் எவ்வளவு முயன்றும் கோல் அடிக்க முடியததால் தோல்வியை தழுவியது.