இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கேப்டன் ஓய்வு:
சுனில் சேத்ரி குவைத்துக்கு எதிரான ஃபிபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கு பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். 39 வயதான சுனில் சேத்ரி இந்தியாவுக்காக இதுவரை 145 சர்வதேச போட்டிகளில் விளையாடி 93 கோல்களை அடித்துள்ளார்.
வருகின்ற ஜூன் 6ம் தேதி இந்திய கால்பந்து அணி, குவைத்துக்கு எதிராக ஃபிபா உலகக் கோப்பை 2026 தகுதிச் சுற்று போட்டியில் விளையாடுகிறது. இதுவே, சேத்ரியின் கடைசி போட்டியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சுனில் சேத்ரியின் இந்த திடீர் ஓய்வு முடிவு இந்திய கால்பந்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கும் என்பதில் எந்தவொரு மாற்று கருத்தும் இல்லை.
தனது ஓய்வு குறித்து எக்ஸ் பக்கத்தில் 9 நிமிட வீடியோவாக பேசிய சுனில் சேத்ரி, ” இந்த வீடியோவில் நான் உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிய நேரம் இது. நான் எனது முதல் போட்டியில் விளையாடியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. எனது முதல் போட்டி, எனது முதல் கோல், இது எனது பயணத்தின் மறக்க முடியாத தருணம், நாட்டிற்காக இவ்வளவு போட்டிகளில் விளையாடுவே என்று நான் நினைக்கவே இல்லை. நான் ஓய்வு பெற முடிவு செய்தபோது, முதலில் பெற்றோரிடமும், மனைவியிடமும் கூறினேன்.” என தெரிவித்தார்.
சர்வதேச அறிமுக போட்டி:
சுனில் சேத்ரி கடந்த 2005 ஜூன் 12ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச போட்டியில் அறிமுகமானார். அந்த போட்டியில் தனது முதல் சர்வதேச கோலையும் பதிவு செய்தார். அன்று தொடங்கிய பயணத்தின் வெற்றி நடை, இவருக்கு ஆறு முறை AIFF ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். இது தவிர, 2011ல் அர்ஜூனா விருதும், 2019ல் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.
அடுத்த இரண்டு போட்டிகளும் இந்திய அணிக்கு முக்கியம்:
குவைத் மற்றும் கத்தாருக்கு எதிரான ஃபிபா உலகக் கோப்பை 2026 மற்றும் AFC ஆசிய கோப்பை 2027 கூட்டுத் தகுதிக்கான இரண்டாம் கட்டப் போட்டிகளுக்கான இந்திய கால்பந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், வருகின்ற ஜூன் 6-ம் தேதி கொல்கத்தாவில் குவைத் அணிக்கு எதிரான கடைசி இரண்டு ஆட்டங்களில் விளையாடும் இந்திய அணி, ஜூன் 11-ம் தேதி தோஹாவில் கத்தாரை எதிர்கொள்கிறது. இந்திய கால்பந்து அணி தற்போது நான்கு போட்டிகளில் விளையாடி நான்கு புள்ளிகளுடன் குரூப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஃபிபா உலகக் கோப்பை தகுதிப் போட்டியின் மூன்றாவது சுற்றுக்குத் தகுதி பெறும். மேலும், AFC ஆசியக் கோப்பை சவுதி அரேபியா 2027 இல் தங்கள் இடத்தைப் பதிவு செய்யும்.