தோல்வி அடைந்த இந்திய அணி:


2026-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடைபெற்றது. இதில் ஆசிய அளவிலான தகுதி சுற்றின் 2-வது கட்ட போட்டியில் 36 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த அணிகள் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன.


இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, கத்தார், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதியது. புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் 3-வது கட்ட தகுதி சுற்று தொடருக்கு முன்னேறியது. இதில் இந்திய அணி தங்களது கடைசி ஆட்டத்தில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி கத்தார் அணியை எதிர்கொண்டு விளையாடியது.


நீக்கப்பட்ட இகோர் ஸ்டிமாக்:


இந்த போட்டியில் வெற்றி பெற்றால் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதன் மூலம் தகுதி சுற்றின் 3வது கட்டத்துக்கு முன்னேறி சாதனை படைக்கும் இந்திய அணியின் கனவு பறிபோனது. இந்த தோல்வியினால் இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கை அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இச்சூழலில்  இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கை கடந்த ஜூன் 17 ஆம் தேதி நீக்கியது அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு.


அதிகார வெறியர்களின் கைகளில் கால்பந்து அணி:


இந்நிலையில், இந்திய கால்பந்து ஒரு சில அதிகார வெறியர்களின் கைகளில் சிக்கியிருப்பதாக இகோர் ஸ்டிமாக் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்கள் சந்தில் பேசிய அவர், “நான் இந்திய கால்பந்து அணிக்கு திறந்த மனதுடன் வந்தேன். ஆனால் இங்கு கால்பந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளது போல் இருக்கிறது. இந்திய கால்பந்து அணியை மேம்படுத்த வேண்டும் என்றால் இரண்டு தசாப்தங்கள் ஆகும்.


நான் இந்திய கால்பந்து அணியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது எனக்கு ஆச்சரியமில்லை. அதை நான் முன்பே அறிந்திருந்தேன்.  சரியான ஆதரவின்றி, பொய்கள் மற்றும் தனிப்பட்ட நலன்களை மட்டுமே கொண்ட நபர்களுடன் என்னால் தொடர முடியாது.


AIFF இல் உள்ளவர்களுக்கு கால்பந்து நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்று தெரியாது, கோப்பைகளை எப்படி வெல்வது என்று அவர்களுக்குத் தெரியாது. இவர்கள் அதிகாரத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள். இந்திய கால்பந்து ஒரு சில அதிகார வெறியர்களின் கைகளில் சிக்கியிருக்கிறது” என்று கூறியுள்ளார் இகோர் ஸ்டிமாக்.


மேலும் படிக்க: AUS vs BAN: வங்கதேசத்தை சூப்பர் 8ல் சிதைத்த ஆஸ்திரேலியா.. 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தல்!


மேலும் படிக்க: Fact Check: விரைவில் சானியா மிர்சா - முகமது ஷமி திருமணமா..? சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்..!