அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடப்பு டி20 உலகக்கோப்பைத் தொடரை நடத்தி வருகிறது. இதில், அமெரிக்க மண்ணில் லீக் போட்டிகள் நிறைவு பெற்று, சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் தற்போது வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்று வருகிறது.


இன்னும் முழுதும் வெளிப்படுத்தாத இந்தியாவின் திறமை:


இந்த நிலையில், இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய வெற்றி பெற்றாலும், சூர்யகுமார் –ஹர்திக் பாண்ட்யா அதிரடியால் 181 ரன்களை குவித்தது.


இந்திய பந்துவீச்சாளர்களான அர்ஷ்தீப்சிங், பும்ரா வேகத்தாலும், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ் சுழலாலும் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. இந்த தொடர் தொடங்கியது முதலே இந்திய அணி தோல்வியே சந்திக்காத அணியாக இருந்தாலும் இந்திய அணியின் செயல்பாடு என்பது முழுமையாக வெளிப்படவில்லை என்பதே உண்மை.


சொதப்பும் ஜடேஜா:


பேட்டிங்கில் இன்னும் ரோகித், விராட் கோலி தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஷிவம் துபேவும் பெரியளவில் கைகொடுக்கவில்லை. இவர்களைத் தவிர அனைவரது கவனமும் தற்போது ஆல் ரவுண்டர் ஜடேஜா மீது திரும்பியுள்ளது. ரோகித், கோலி அளவிற்கு அனுபவமிக்க வீரரான ஜடேஜா, இதுவரை இந்த தொடரில் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவே இல்லை.


ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஜடேஜா, நேற்றைய போட்டியில் பேட்டிங்கில் வெறும் 7 ரன்களும், பந்துவீசி 1 விக்கெட்டும் வீழ்த்தினார். இந்த தொடரில் இந்திய அணி இதுவரை மொத்தமாக 5 போட்டிகள் ஆடியுள்ளது. அதில் கனடா அணிக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 4 போட்டிகளில் ஆடியுள்ள ஜடேஜா 7 ரன்களும், 1 விக்கெட்டும் மட்டுமே கைப்பற்றியுள்ளார்.


எப்போது கம்பேக் தருவார்?


இந்திய அணியின் முதன்மை ஆல்ரவுண்டராக திகழும் ஜடேஜாவின் செயல்பாடு, ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்திய அணி அடுத்து ஆடப்போகும் வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி முழு கூட்டு முயற்சியுடன் செயல்பட்டாக வேண்டும். குறிப்பாக, ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி முழு திறமையுடன் ஆடினால் மட்டுமே இந்திய அணியால் வெற்றி பெற முடியும்.


டி20 கிரிக்கெட்டில் நிரம்ப அனுபவம் கொண்ட ஜடேஜா, கடந்த ஐ.பி.எல். தொடரில் சிறப்பான பந்துவீச்சையும், பேட்டிங்கையும் வெளிப்படுத்தினார். ஆனால், இந்திய அணிக்காக இந்த தொடரில் மிகவும் மோசமாக ஆடி வருகிறார். இதனால், அவர் உடனடியாக ஃபார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம் ஆகும். ஜடேஜா மட்டுமின்றி இந்த தொடர் முழுக்க இதுவரை சிறப்பாக ஆடாத ரோகித்சர்மா, விராட் கோலி, ஷிவம் துபே ஆகியோரும் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும்.


மேலும் படிக்க: Fact Check: விரைவில் சானியா மிர்சா - முகமது ஷமி திருமணமா..? சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்..!


மேலும் படிக்க: AUS vs BAN: வங்கதேசத்தை சூப்பர் 8ல் சிதைத்த ஆஸ்திரேலியா.. 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தல்!