ஃபிபா சர்வதேச கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் நடைபெற இருக்கும் இந்த தொடரானது வருகின்ற 20ம் தேதி கத்தாரில் துவங்க உள்ளது. 32 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் அணிகள் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் விளையாட இருக்கின்றனர். லீக் சுற்று முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் என்ற 2-வது சுற்றுக்குள் நுழையும். போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 3.30 மணி, 6.30 மணி, இரவு 9.30 மணி, நள்ளிரவு 12.30 மணி ஆகிய நேரங்களில் நடக்கிறது. முதல் போட்டியானது வருகின்ற 20-ஆம் தேதி கத்தார் மற்றும் ஈகுவடார் நாடுகளுக்கிடையே நடைபெற உள்ளது.


வரும் 20-ம் தேதி கத்தாரில் உள்ள அல் பேத் மைதானத்தில் இந்த போட்டி துவங்க உள்ளது. கடந்த 1930-ஆம் ஆண்டு முதல் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் இந்த உலகக்கோப்பை போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.



கோல்டன் ஷூ


இதில் ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் அதிக கோல் அடிப்பவருக்கு கோல்டன் ஷூ (தங்க காலணி) என்கிற விருது வழங்கப்படும். மிகவும் பெருமைக்குரிய விருதான இதனை, ஒவ்வொரு வருடமும் வெல்வதற்கு கடும் போட்டி நிலவும். ஒவொரு வருடமும் இதனை வென்றவர்கள் யார் அவர்கள் எத்தனை கோல்கள் அடித்தார்கள் என்று பார்க்கலாம். உருகுவே நாட்டில் நடந்த முதல் ஃபிபா உலகக்கோப்பை 1930-இல் அர்ஜென்டினாவை சேர்ந்த கில்லர்மோ ஸ்டேபில் 8 கோல்கள் அடித்து முதல் கோல்டன் ஷூவை வென்றார்.


இந்த பட்டியலில் ஒரு உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவராக ஃபிரான்சின் ஜஸ்ட் போன்டைன் உள்ளார். 1958 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டில் நடந்த இந்த உலகக்கோப்பையில் அவர் மொத்தம் 13 கோல்கள் அடித்து அசத்தினார். முன்னதாக ஹங்கேரியின் சாண்டோர் கோசிஸ் சுவிட்சர்லாந்தில் நடந்த 1954 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் 11 கோல்கள் அடித்து கோல்டன் ஷூ வாங்கியதே சிறந்ததாக இருந்தது. அந்த சாதனையை ஜஸ்ட் போன்டைன் அடுத்த தொடரிலேயே முறியடித்தார்.


தொடர்புடைய செய்திகள்: TN Rain: 21, 22-ஆம் தேதிகளில் மீண்டும் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. வடதமிழகத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை.. மக்களே உஷார்..


ஒரே தொடரில் 6 கோல்டன் ஷூ


இவர்களுக்கு அடுத்தபடியாக 10 கோல்கள் அடித்து மேற்கு ஜெர்மனியின், கெர்ட் முல்லர் இருக்கிறார். இந்த சாதனையை இவர் 1970-ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் செய்தார். மேலும் இந்த விருது ஒரு தொடரில் ஒருவருக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை, அதிக கோல்களுடன் எத்தனை பேர் சமமாக இருந்தாலும் அனைவருக்கும் கொடுக்கப்படும். அதுபோன்ற நிகழ்வுகள் இரண்டே முறை மட்டுமே நடந்துள்ளன. அதிலும் ஒரு முறை 6 பேர் கோல்டன் ஷூ வாங்கினார்கள். 1962 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் கரிஞ்சா, வாவா என்ற பிரேசில் வீரர்கள் இருவருடன் சேர்த்து, ஆறு பேர் தலா 4 கோல்கள் அடித்து கோல்டன் ஷூ வாங்கினர். அதே போல அமெரிக்காவில் 1994இல் நடைபெற்ற உலகக்கோப்பையில் ரஷ்யாவை சேர்ந்த வோலெக் சலென்கோ, பல்கேரியாவை சேர்ந்த ஹிரிஸ்டோ ஸ்டோய்ச்கோவ் இருவரும் தலா 6 கோல்கள் அடித்து கோல்டன் ஷூ வாங்கினர்.



ஃபிபா வரலாற்றில் கோல்டன் ஷூ வங்கியவர்கள் பட்டியல்



  • 1930 - கில்லர்மோ ஸ்டேபில் - அர்ஜென்டினா - 8 கோல்கள்

  • 1934 - வோல்ட்ரிச் நெஜெட்லி - செக்கோஸ்லோவாக்கியா - 5 கோல்கள்

  • 1938 - லியோனிடாஸ் - பிரேசில் - 7 கோல்கள்

  • 1950 - அடெமிர் - பிரேசில் - 8 கோல்கள்

  • 1954 - சாண்டோர் கோசிஸ் - ஹங்கேரி - 11 கோல்கள்

  • 1958 - ஜஸ்ட் போன்டைன் - பிரான்ஸ் - 13

  • 1962 - கரிஞ்சா(பிரேசில்), வாவா(பிரேசில்), லியோனல் சான்செஸ்(சிலி), ஃப்ளோரியன் ஆல்பர்ட்(ஹங்கேரி), டிராசன் ஜெர்கோவிக் (யூகோஸ்லாவியா), வாலண்டைன் இவானோவ்(சோவியத் யூனியன்) - 4 கோல்கள்

  • 1966 - யூசிபியோ - போர்ச்சுகல் - 9 கோல்கள்

  • 1970 - கெர்ட் முல்லர் - மேற்கு ஜெர்மனி - 10 கோல்கள்

  • 1974 - கிரேசிகர்ஸ் லக்ட்டா - போலந்து 7 கோல்கள்

  • 1978 - மரியோ கெம்பஸ் - அர்ஜென்டினா - 6 கோல்கள்

  • 1982 - பாலோ ரோஸி - இத்தாலி - 6 கோல்கள்

  • 1986 - கேரி லினேக்கர் - இங்கிலாந்து - 6 கோல்கள்

  • 1990 - சால்வடோர் ஷிலாச்சி - இத்தாலி - 6 கோல்கள்

  • 1994 - வோலெக் சலென்கோ(ரஷ்யா), ஹிரிஸ்டோ ஸ்டோய்ச்கோவ்(பல்கேரியா) - 6 கோல்கள்

  • 1998 - டேவர் சுக்கர் - குரோஷியா - 6 கோல்கள்

  • 2002 - ரொனால்டோ - பிரேசில் - 8 கோல்கள்

  • 2006 - மிரோஸ்லாவ் க்ளோஸ் - ஜெர்மனி - 5 கோல்கள்

  • 2010 - தாமஸ் முல்லர் - ஜெர்மனி - 5 கோல்கள்

  • 2014 - சாம்ஸ் ரோட்ரிக்ஸ் - கொலம்பியா - 6 கோல்கள்

  • 2018 - ஹாரி கேன் - இங்கிலாந்து - 6 கோல்கள்

  • 2022 - ???