தென்கிழக்கு வங்கக்கடல்  மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில்  காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி  உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு  திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல்  பகுதிகளில்  நாளை வலுபெறக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கடுத்த மூன்று தினங்களில் மேற்கு - வடமேற்கு  திசையில் தமிழக - புதுவை  மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


அதேபோல் 21-ஆம் தேதி வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.


இந்நிலையில், வடதமிழகத்தில் வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வனிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளது.  காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடதமிழகம் மற்றும் ஆந்திராவை நோக்கி நகரக்கூடும் எனவும், இதனால் தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் காணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 20ம் தேதியன்று தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


18.11.2022: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் தென்மேற்கு  வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


19.11.2022: இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல்  மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


20.11.2022 முதல் 21.11.2022 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல்  பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


எனவே குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என, மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.