பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் ஐந்து கோல்களை அடித்த முதல் வீரர என்ற பெருமையை கைலியன் எம்பாப்பே படைத்துள்ளார். 


பிரான்ஸ் கோப்பையில் கடந்த திங்கட்கிழமை இரவு பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியும், பெய்ஸ் டி கேசல் அணியும் நேருக்கு நேர் மோதியது. இதில், பாரிஸ் அணி 7-0 என்ற கோல் கணக்கில் பெய்ஸ் டி கேசல் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. 






பிரான்ஸில் உள்ள லென்ஸ் நகரின் ஸ்டேடு போலார்ட் மைதானத்தில் கடந்த திங்கட் கிழமை 32 வது சுற்று போட்டி நடந்தது. இதில், பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியும், பெய்ஸ் டி கேசல் அணியும் மோதியது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே பிரான்ஸ் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே போட்டி முழுவதும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். 


போட்டி தொடங்கிய 29வது நிமிடத்தில் எம்பாப்பே முதல் கோலை பதிவு செய்ய, தொடர்ந்து 33 வது நிமிடத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் தனது பங்கிற்கு அடுத்த கோலை போட்டார். 34வது நிமிடத்தில் மீண்டும் கைலியன் எம்பாப்பே கோல் அடித்து மிரட்ட, எதிரணி என்ன செய்வது என்று தெரியாமல் திணறியது. 







அடுத்தடுத்து மீண்டு அசத்த தொடங்கிய எம்பாப்பே, போட்டியின் 40 மற்றும் 56 வது நிமிடங்களில் கோல் போட்டு அனைவரது பார்வையையும் தன் பக்கம் திருப்பினார். பாரிஸ் அணிக்காக கார்ல்ஸ் சோலர் 64 வது நிமிடத்தில் ஒரு கோலை பதிவு செய்ய, 79வது நிமிடத்தில் மிகவும் கூலாக எம்பாப்பே தனது 5வது கோலை பதிவு செய்தார். இதன்மூலம் பாரிஸ் அணி 7-0 என்ற கோல் கணக்கில் வென்றது. எதிரணியான பெய்ஸ் டி கேசல் அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


எம்பாப்பே சாதனை:


பாரிஸ் அணிக்காக ஒரே போட்டியில் ஐந்து கோல்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை கைலியன் எம்பாப்பே படைத்துள்ளார். அதேபோல், பாரிஸ் அணிக்காக இதுவரை அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் எம்பாப்பே இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.






இதற்கு முன்னதாக, எடிசன் கவனி என்ற வீரர் பாரிஸ் அணிக்காக 200 கோல்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். அதற்கு அடுத்த இடத்தில் எம்பாப்பே 196 கோல்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் முதல் இடத்திற்கு செல்ல இன்னும் 5 கோல்களே தேவையாக உள்ளது. 


மேலும், இந்த சீசனில் எம்பாப்பே பாரிஸ் அணிக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாடி 23 கோல்களை அடித்துள்ளார்.