பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மாதம் கத்தாரில் பரபரப்பாக நடைபெற்ற கால்பந்தாட்ட உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரான்சை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட மெஸ்ஸி தனது கடைசி உலகக்கோப்பை தொடரிலாவது, கோப்பையை கைப்பற்றுவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விறுவிறுப்பான போட்டியில் சிறப்பான பங்களிப்பு அளித்து கோப்பையை கைப்பற்றினார் மெஸ்ஸி. மைதானத்தில் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோரும், தொலைக்காட்சி மற்றும் இணையம் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களும் இந்த போட்டியை கண்டுகளித்தனர்.
இந்த போட்டிக்கு பிறகு கோல்டன் பூட் விருது எம்பாப்பேவுக்கும், தொடர் நாயகனுக்கான கோல்டன் பால் விருது அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. அதேபோல், சிறந்த கோல்கீப்பருக்கான கோல்டன் கிளௌவ் விருது அர்ஜெண்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ்க்கு வழங்கப்பட்டது. இதையடுத்து கோல்டன் கிளௌவ் வென்ற முதல் அர்ஜெண்டினா வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்த விருது நிகழ்வுக்கு பிறகு கோல் கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் கோல்டன் கிளௌவ் விருதை தனது இரண்டு கால்களுக்கு இடையில் வைத்து ஆபாசமான முறையில் சைகை ஒன்றை செய்தார். அதேபோல், டிரஸ்ஸிங் அறையில் பிரான்ஸ் நட்சத்திர வீரராக கைலியன் எம்பாப்பேவையும், அர்ஜெண்டினா கோல் கீப்பர் மற்றும் அவரது குழுக்கள் கேலி செய்தனர்.
இந்தநிலையில், இந்த இரண்டு வீடியோக்களுக்கும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, அர்ஜெண்டினா அணி மீது கடும் விமர்சனம் எழுந்தது. தொடர்ந்து, தாக்குதலுக்குரிய செயல், நியாயமான விளையாட்டு கொள்கைகளை மீறுதல் மற்றும் வீரர்களின் தவறான நடத்தை தொடர்பான விதிகளை அர்ஜெண்டினா மீறியதாக கால்பந்து உலக நிர்வாக குழு தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அர்ஜெண்டினா கால்பந்து கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் விளக்கமளித்தார். அதில், ”பிரான்ஸ் கால்பந்து வீரர்கள் தன்னை மைதானத்தில் கடுமையாக கேலி செய்தனர். அதன் காரணமாகவே இவ்வாறு செய்தேன்” என்று தெரிவித்தார்.
இருப்பினும் இந்த முறையற்ற சைகளை செய்ததற்காக மார்டினெஸ் மீது அபராதம் அல்லது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இதற்கு உடந்தையாக இருந்ததாக நடப்பு உலகக் கோப்பை சாம்பியனான அர்ஜெண்டினா அணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து அமைப்பு குழு அமைத்தது.