Franz Beckenbauer: வீரராகவும், விளையாட்டு நிர்வாகியாகவும் உலகக் கோப்பையை வென்ற மூவரில் ஒருவரான, ஜெர்மனியைச் சேர்ந்த ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் காலமானார்.


மறைந்தார் ஃபிரான்ஸ் பெக்கன்பவுர்:


கால்பந்தாட்ட உலகின் ஆகச்சிறந்த வீரர்களில் ஒருவரன, ஜெர்மனியைச் சேர்ந்த  ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் தனது 78வது வயதில் காலமானார். 1974 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற மேற்கு ஜெர்மனி அணியின் கேப்டனாக இருந்த பெக்கன்பவுர், பின்னர் 1990ம் ஆண்டு அதே அணியின் மேனேஜராகவும் செயல்பட்டு கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். வீரர் மற்றும் மேலாளராக உலகக் கோப்பையை வென்ற மூன்று பேரில் இவரும் ஒருவராவார். 1972இல் மேற்கு ஜெர்மனியுடன் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


கால்பந்தாட்ட கோப்பைகள்:


பேக்கன்பவுர் மேற்கு ஜெர்மனிக்காக 104 சர்வதேச போட்டிகளிலும், பேயர்ன் முனிச்சுடன் 400க்கும் மேற்பட்ட போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். 1964 மற்றும் 1977 க்கு இடையில் பவேரியன் கிளப்பில் இணைந்த அவர் 13 ஆண்டுகளில், 1973/74, 1974/75 மற்றும் 1975/76 ஆண்டுகளில் தற்போது UEFA சாம்பியன்ஸ் லீக் என அழைக்கப்படும் ஐரோப்பிய கோப்பை பட்டங்களை தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று அசத்தினார். ஐந்து ஜெர்மன் லீக் பட்டங்கள், 1966/67 இல் இண்டர்காண்டினென்டல் கோப்பை மற்றும் ஐரோப்பிய கோப்பை வெற்றியாளர் கோப்பை போன்ற பல ஜெர்மன் கோப்பைகளையும் வென்றார்.


மேனேஜராகவும் அசத்தல்:


டெர் கைசர் அல்லது "தி எம்பரர்" என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் பெக்கன்பவுர்,  எல்லா காலத்திலும் சிறந்த டிஃபெண்டர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மிட்ஃபீல்டில் டிஃபெண்டர் ஸ்வீப்பர் பாத்திரத்தில் கைதேர்ந்தவராக திகழ்ந்தார். கால்பந்தாட்டத்தில் லிபரோ என்று அழைக்கப்படும் பாத்திரத்தை உருவாக்கிய பெருமை அவரையே சேரும். 1990 உலகக் கோப்பையில் மேற்கு ஜெர்மனியை கேப்டனாக வழிநடத்தி கோப்பையை வென்றதோடு, 1993/94 இல் பேயர்னை பன்டெஸ்லிகா பட்டத்திற்கு அழைத்துச் சென்றார். 1995/96 இல் கிளப்பின் மேலாளராக UEFA கோப்பையையும் வென்றார். செப்டம்பர் 1945 இல் முனிச்சின் தொழிலாள வர்க்க மாவட்டமான கீஸ்லிங்கில் பிறந்த பெக்கன்பவுர்,  பேயர்னின் இளைஞர் அணியில் சேர்ந்தார். தொடர்ந்து, 1968-69 பருவத்தில், பெக்கன்பவுர் கிளப் கேப்டனானார்.  முதல் ஆண்டிலேயே டாப் ஃப்ளைட்டர் பட்டத்தையும்  லீக் சுற்றில் ஹாட்ரிக் வெற்றியையும் அந்த அணி பதிவு செய்ய,  அணியின் தவிர்க்க முடியாத நபராக மாறினார்.


சர்வதேச போட்டிகளில் சாதனைகள்:


1966 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை மூலம் தனது 20வது வயதில் பெக்கன்பவுர் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அந்த தொடரில் ஜெர்மனி தோல்வியுற்றாலும், அதுவே அந்த அணிக்கான பொற்காலத்தின் தொடக்கமாக அமைந்தது. இதனிடையே, பெக்கன்பவுர் கேப்டனாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பை பட்டத்தை வெல்வதற்கு முன்பே,  1972 பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பை ஜெர்மனி  வென்றது. சிறப்பான செயல்பாட்டிற்காக பெக்கன்பவுர் 1972 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் Ballon d'Or விருதை வென்றார் .1983ம் ஆண்டு அவர் கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அதே ஆண்டில், பெக்கன்பவுர் மேற்கு ஜெர்மனியின் மேனேஜராக நியமிக்கப்பட்டார். பயிற்சியாளராக முன் அனுபவம் இல்லாத போதிலும், பெக்கன்பவுர் 1986 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிகளில் அணியை வழிநடத்தினார், கடைசி ஆண்டில் பட்டத்தை வென்றார். இதன் மூலம் பிரேசிலின் மரியோ ஜகாலோவுக்குப் பிறகு ஒரு வீரராகவும், மேலாளராகவும் உலகக் கோப்பையை வென்ற இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார். தனது வாழ்நாளில் மொத்தமாக 100-க்கும் அதிகமான கோல்களை அவர் அடித்துள்ளார். அதில், மேற்கு ஜெர்மனிக்காக அடிக்க, 1966 உலகக் கோப்பையில் மட்டுமே 4 கோல்களை அடித்தது குறிப்பிடத்தக்கது.