அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி தனது வாழ்நாளில் எட்டாவது முறையாக உயரிய விருதான பகன் டி’ஓர் விருதை வென்றுள்ளார். பலோன் டி’ஓர் என்பது கால்பந்தாட்டத்தில் மிகவும் மதிப்புமிக்க விருதாகும். மேலும், தேசிய அணி வீரர்களின் சிறந்த செயல்பாட்டிற்காக ஆண்டுதோறும் ஃபிபா-வால் வழங்கப்படும். இந்தநிலையில், இந்த ஆண்டுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 60 (30 ஆண் மற்றும் 30 பெண்) வீரர்கள், வீராங்கனைகள் இடம் பெற்றிருந்தனர்.  இந்த விருத்துக்கான போட்டி பட்டியலில் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே மற்றும் நார்வே வீரர் எர்லிங் ஹாலண்ட் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.


இந்தநிலையில், இண்டர் மியாமி உரிமையாளரும், கால்பந்து ஜாம்பவானுமான டேவிட் பெக்காம் மெஸ்ஸிக்கு இந்த விருதை வழங்கி கௌரவித்தார். அர்ஜெண்டினாவுக்காக ஃபிபா உலகக் கோப்பையை வென்ற மெஸ்ஸி, இதற்கு முன்பு 2009, 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பலோன் டி'ஓர் விருதை வென்றுள்ளார். 






இந்த விருதை அதிக முறை வென்ற வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார். இவருக்கு பிறகு இந்த விருதை அதிகம் வென்றவர் பட்டியலில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்த விருதை இவர் 5 முறை வென்றுள்ளார்.


விருதை பெற்றதற்கு பிறகு பேசிய மெஸ்ஸி, “ அர்ஜெண்டினா அணியுடன் இணைந்து நாங்கள் சாதித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது. இந்த விருது வீரர்கள், பயிற்சி ஊழியர்கள் மற்றும் அர்ஜெண்டினா மக்கள் அனைவருக்குமான பரிசு இது!” என்றார். 


கடந்த ஆண்டு டிசம்பரில் கத்தாரில் நடந்த உலகக் கோப்பையை அர்ஜெண்டினா அணி வெல்வதற்கு முக்கிய பங்கு வகித்தார் மெஸ்ஸி. கடந்த 2022ம் ஆண்டு நடந்த கால்பந்து உலகக் கோப்பையில் மெஸ்ஸி ஏழு கோல்களை அடித்ததுடன் 4 ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார். 






பிஎஸ்ஜி அணிக்காக தனது இறுதிப் பருவத்தில், மெஸ்ஸி 11வது பிரெஞ்சு லீக் பட்டத்தை வென்றார். மெஸ்ஸி தற்போது அமெரிக்காவில் உள்ள இண்டர் மியாமி கிளப்பில் விளையாடி வருகிறார்.


பெண்கள் உலகக் கோப்பை வென்ற ஸ்பெயின் அணியில் இடம்பெற்றிருந்த  அடானா பொன்மதிக்கு பெண்களுக்கான பலோன் டி’ஓர் விருது வழங்கப்பட்டது. 


பலோன் டி’ஓர் விருது:



  • உலகின் சிறந்த ஆண் மற்றும் பெண் கால்பந்து வீரர்கள் மட்டுமே அதற்கு தகுதியானவர்கள்.

  • 1956 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆண்களின் சிறந்த விளையாட்டிற்காக இவ்விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

  • சிறந்த பெண் வீராங்கனைகளுக்கு பலோன் டி’ஓர் விருது வழங்கும் நிகழ்வானது கடந்த 2018 முதல் கொடுக்கப்பட்டு வருகிறது.

  • 2020ல் மட்டும் கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்த விருது வழங்கப்படவில்லை.