பிரபல கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, இன்ஸ்டாகிராமில் 60 கோடி ஃபாலோவர்களை பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.


கிறிஸ்டியானோ ரொனால்டோ:


கால்பந்தாட்டம் பற்றி எதுவுமே தெரியாத நபர்கள் கூட, கிறிஸ்டியானோ ரொனால்டோ என்ற பெயரை வாழ்நாளில் ஒருமுறையாவது உச்சரித்து இருப்பார்கள். போர்ச்சுகலை சேர்ந்த அந்த வீரர் கால்பந்தாட்ட நிகழ்வுகளில் அவர் நிகழ்த்திய சாதனைகள் அத்தகையது. இதன் காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். இதனை உணர்த்தும் விதமாக தான் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில், ரொனால்டோவின் கணக்கை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, வேறு யாருமே இதுவரை எட்டாத உச்சமாக, ரொனால்டோவின் இன்ஸ்டாகிராம் கணக்கு 60 கோடி ஃபாலோவர்களை பெற்றுள்ளது. 


60 கோடி ஃபாலோவர்கள்:


சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 600 மில்லியன் ஃபாலோவர்களை கடந்த உலகின் முதல் நபர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார். ரொனால்டோவிற்கு அடுத்ததாக அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி 482 மில்லியன் பாலோவர்களுடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்க பாடகி செலீனா கோமெஸ் 427 மில்லியன் பாலோவர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்த சாதனை பட்டியலி உள்ள மற்ற இரண்டு விளையாட்டு வீரர்கள் கோலி மற்றும் நெய்மர் மட்டுமே. கோலி 256 மில்லியன் ஃபாலோவர்களையும், நெய்மர் 211 மில்லியன் ஃபாலோவர்களையும் பெற்றுள்ளனர்.


கிடுகிடுவென உயர்ந்த ஃபாலோவர்கள்:


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இன்ஸ்டாகிராமில், ரொனால்டோ 500 மில்லியன் ஃபாலோவர்களை எட்டினார். கடந்த மே மாதம் தொடங்கி தற்போது வரையில் மட்டும் ரொனால்டொவின் இன்ஸ்டாகிராம் கணக்கு புதியதாக 150 மில்லியன் ஃபாலோவர்களை பெற்றுள்ளது. இதன் மூலம், இன்ஸ்டாகிராமில் வெளியிடும் ஒரு பதிவின் மூலம், அதிக வருவாய் ஈட்டும் நபர்களின் பட்டியலிலும் ரொனால்டோ தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.


ரூ.26 கோடி வருவாய்:


திரைப்பிரபலங்கள் மற்றும் முன்னணி விளையாட்டு வீரர்களுக்கு சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான ஃபாலோவர்கள் இருப்பதால், அவர்கள் மூலம் தங்களது நிறுவனங்களை விளம்பரப்படுத்த பல்வேறு நிறுவனங்கள் முனைப்பு காட்டுகின்றன. இதற்காக ஒவ்வொரு பதிவிற்கும் ஃபாலோவர்கள் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. அந்த வகையில், உலகிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்களை கொண்ட ரொனால்டோ, தனது ஒவ்வொரு பதிவிற்கும் 3.23 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.26 கோடி வரை ஊதியமாக வழங்கப்படுகிறது. ஒரு இன்ஸ்டாகிரம் பதிவிற்காக வேறு எந்த நபரும் இவ்வளவு ஊதியம் வாங்குவதில்லை. இரண்டாவது இடத்தில் உள்ள லியோனல் மெஸ்ஸ் ஒரு பதிவுக்கு ரூ.21 கோடி ஊதியமாக வாங்குகிறார்.


வருவாயில் முதலிடம்:


ஃபோர்ப் அறிவிப்பின்படி, விளையாட்டு வீரர்களின் ஆண்டு வருவாய் பட்டியலில் கடந்த 2017ம் ஆண்டு முதல் மூன்றாவது முறையாக ரொனால்டோ நடப்பாண்டு முதலிடத்த பிடித்துள்ளார். விளையாட்டு வீரர் பிரிவில் ஓராண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிக வருவாய் ஈட்டிய வீரர் என்ற கின்னஸ் சாதனையையும் ரொனால்டோ அண்மையில் தனதாக்கினார். ஆண்டிற்கு ரூ.1,775 கோடி வரையிலான ஊதியம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், சவுதி அரேபியாவின் அல் நசர் அணியில் ரொனால்டோ கடந்த ஆண்டு இணைந்தது குறிப்பிடத்தக்கது.