சிறப்பு யாகம்:
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களுள் ஒருவரும், அர்ஜெண்டினா அணியின் கேப்டன், நம்பிக்கை நட்சத்திரமுமான லியோனல் மெஸ்ஸி உலகக்கோப்பையை வெல்ல வேண்டி இந்திய ரசிகர்கள் யாகம் வளர்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஒரு மாதமாக 22ஆவது உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் கோலாகமாக நடைபெற்று ஒருவழியாக அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியும் முன்னாள் சாம்பியானான அர்ஜெண்டினா அணியும் மோதத் தயாராக உள்ள உலகமே உற்று நோக்கும் இந்த இறுதிப் போட்டி, இன்னும் சற்று நேரத்தில் லுசைல் ஐகானிக் மைதானத்தில் தொடங்க உள்ளது.
மேஜிக்கல் மெர்ஸி:
’மேஜிக்கல் மெஸ்ஸி’, ‘மெர்சல் மெஸ்ஸி’ என்றெல்லாம் போற்றப்படும் தற்போதையை அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி, மற்றும் பிரான்ஸ் அணியின் தலைசிறந்த வீரர்களுள் ஒருவரான எம்பாப்வே இருவருக்குமே பெருவாரியான ரசிகர்கள் உள்ள நிலையில், இரு அணி ரசிகர்களும் நகத்தைக் கடித்தபடி இன்றைய இரவை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் பெருவாரியான கால் பந்து ரசிகர்களைக் கொண்டிருக்கும் கொல்கத்தா நகரில் மெஸ்ஸி வெற்றி பெற வேண்டி யாகம் நிகழ்த்தப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மெஸ்ஸி தனது இறுதி உலகக்கோப்பை போட்டியில் கோப்பையைக் கைப்பற்ற விரும்பி யாகம் செய்யும் இந்நபரின் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதேபோல் பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பெரிய லியோனல் மெஸ்ஸியின் பேனருக்கு தெருவில் அமர்ந்து ஒருவர் யாகம் செய்யும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி உள்ளது.
தங்கக் காலணி யாருக்கு?
நடப்பு தொடரில் இதுவரை பிரான்சின் எம்பாப்பே மற்றும் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி ஆகியோர் தலா 5 கோல்கள் அடித்து, அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். ஒருவேளை இறுதிப்போட்டி முடிந்த பின்னும் இதே நிலை தொடர்ந்தால், குறைந்த எண்ணிக்கையிலான பெனால்டி கோல்களைப் பெற்ற வீரருக்கு தங்க காலணி வழங்கப்படும்.
லியோனல் மெஸ்ஸி நெதர்லாந்து, குரோஷியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய அணிகளுக்கு எதிராக தலா ஒரு பெனால்டியை கோலாக மாற்றியுள்ளார், அதே நேரத்தில் எம்பாப்பேவின் அனைத்து கோல்களும் அவுட்பீல்டில் இருந்து வந்தவை. அதனால் தங்க காலணிக்காக பட்டியலில் எம்பாப்பே முன்னிலையில் இருக்கிறார். ஒரு வேளை இன்றைய போட்டியில் மெஸ்ஸி கோல் அடித்து எம்பாப்பே கோலடிக்கவில்லை என்றால் மெஸ்ஸிக்கு தங்க காலணி வந்து சேரும்.
இப்போது அந்த பிரச்சனை இல்லை, இருந்தாலும், அனுமானமாக மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே பெனால்டி மற்றும் அவுட்ஃபீல்ட் கோல்களின் எண்ணிக்கையிலும் சமமாக இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படி இருந்தால், அசிஸ்ட் கோல் எண்ணிக்கையை கணக்கில் எடுக்கிறார்கள். யார் அதிக கோலில் பங்கு கொண்டிருக்கிறார் என்பதை வைத்து கணக்கிடுகிறார்கள். ஒரு வேளை அந்த நிலை வந்திருந்தால் இன்னும் சிக்கல் தான், அசிஸ்ட் கோல்களில் மெஸ்ஸி எம்பாப்பே இருவருமே தலா 11 என்ற கணக்கில் தற்போதைக்கு சமமாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.