Watch Video: அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர நாயகன் லியோனல் மெஸ்ஸிக்கு கேரளாவில் அவரது ரசிகர்கள் நடுக்கடலில் 100 அடி ஆழத்தில் அவருக்கு கட் - அவுட் வைத்துள்ளனர்.
உலகக்கோப்பை கால்பந்து வந்து விட்டாலே உலகம் முழுவதும் தனிக்கொண்டாட்டம் தான். அதிலும் கால்பந்து ரசிகர்களுக்குள் தனி குஷியே ஏற்பட்டு விடுகிறது. அதிலும், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கால்பந்து உலகக்கோப்பை நடைபெறுவதால், ரசிகர்கள் மிகவும் வெறித்தனமான காத்திருப்புக்குப் பின்னர் களத்தில் இறங்கும் தங்களது அபிமான கால்பந்து வீரர்களுக்காக செய்யக்கூடிய விஷயங்களைப் பார்த்தால், மிகவும் பிரம்மிப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கும்.
நடுக்கடலில் பேனர்:
இறுதிப்போட்டிக்கு 6வது முறையாக முன்னேறியுள்ள அர்ஜெண்டினா அணியின் அசகாய சூரன் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். அதிலும், குறிப்பாக இந்தியாவில் கேரளாவில் கால்பந்து விளையாட்டுக்கு மட்டும் பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அப்படி இருக்கும்போது, அதில், இறுதிப்போட்டி வரை வந்துள்ள அர்ஜெண்டினாவுக்கு உள்ள ரசிகர்கள் மட்டும் பெரும் தனிப்படை என்றே கூறலாம். அப்படி இருக்கும் ரசிகர் பட்டாளத்தில் ஒரு குழு அரபிக்கடலில் படகில் பயணம் செய்து, நடுக்கடலில் 100 அடி ஆழத்தில் மெர்சல் மெஸ்ஸிக்கு கட் - அவுட் வைத்து அதகளப்படுத்தியுள்ளனர்.
கடைசி உலகக்கோப்பை:
ஃபிபா உலகக் கோப்பை 2022 இறுதிப்போட்டிக்கு பிறகு டிசம்பர் 18-ஆம் தேதி ஓய்வு பெறப்போவதாக லியோனல் மெஸ்ஸி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அர்ஜெண்டினா தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேசிய மெஸ்ஸி, ”இறுதிப்போட்டிக்கு அர்ஜெண்டினா அணி மீண்டும் ஒருமுறை சென்றது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு பிறகு, என்னுடைய உலகக் கோப்பை பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதுகிறேன். அடுத்த உலகக் கோப்பை வருவதற்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது.
அதுவரை என்னால் விளையாட முடியுமா? என்று தெரியவில்லை. தொடர்ந்து, அடுத்த உலகக் கோப்பை வரை விளையாடினாலும் தற்போது மாதிரி சிறப்பாக செயல்பட்டு, அர்ஜெண்டினா அணியை இறுதிப்போட்டி வரை கொண்டு செல்வோனா என்று தெரியாது. வரும் 18ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கும். அதில், உலகக் கோப்பையை வென்று தருவேன் என நம்புகிறேன்” என தெரிவித்திருந்தார்.
உலகக்கோப்பை கனவு:
தொடர்ந்து பேசிய மெஸ்ஸி, ஃபிபா உலகக் கோப்பை தொடரில் பல்வேறு சாதனைகள் படைத்தது மகிழ்ச்சிதான். ஆனால், உலகக் கோப்பையை வெல்வதே எங்களுடைய முக்கிய குறிக்கோள். அதை வென்று ஒன்னும் அழகாக மாற்றுவோம். உலகக் கோப்பையை வெல்ல இன்னும் ஒரு அடி அருகே தான் இருக்கிறோம். அதற்காக கடுமையாக போராடுவோம். எங்களால் முடிந்த அனைத்தையும் மேற்கொண்டு இந்தமுறை நீண்டநாள் கனவை நிறைவேற்றுவோம்” என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.