FIFA WORLDCUP 2022: உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மூன்றாவது இடத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் லீக் சுற்றில் எஃப் பிரிவில் இடம் பெற்ற குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகள் மோதின.
லீக் போட்டியில் மொரோக்கோ அணியும் குரோஷிய அணியும் மோதியதில், இரு அணிகளும் கோல் எடுக்காததால் போட்டி டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அரையிறுதி ஆட்டம் வரை மொரோக்கோ அணி தோல்வியை சந்தித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பான ஆட்டம்:
உலகமே மிகவும் உற்றுநோக்கிய இந்த போட்டியில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. போட்டி முதல் நொடியில் இருந்தே துவங்கிவிட்டது. குறிப்பாக கடந்த முறை இரண்டாவது இடம் பிடித்த குரோஷிய அணி இம்முறை மூன்றாவது இடத்தையாவது பிடிக்க வேண்டும் என்பதற்கு மிகவும் சிறப்பாக விளையாடியது.
போட்டியின் 7வது நிமிடத்தில் குரோஷியாவின் ஜோஸ்கோ முதல் கோல் போட்டு போட்டியில் பரபரப்பை பற்றவைத்தார்.
அது தீக்குச்சியை பற்றவைத்ததைப்போல் இருக்க, அடுத்த 2 நிமிடத்தில் அதாவது போட்டியின் 9வது நிமிடத்தில் மொரோக்கோவின் அச்ரஃப் கோல் அடித்து அதகளப்படுத்த மொத்த மைதானமும் ஆர்பரித்தது. அதன் பின்னர் இரு அணிகளும் பலமாக மோதிக்கொண்டன. போட்டியின் முதல் பாதி ஆட்டம் முடிவதற்கு 3 நிமிடங்கள் இருக்கும் போது அதாவது போட்டியின் 42வது நிமிடத்தில் குரோஷிய அணியின் மிஸ்லிவ் கோல் அடிக்க போட்டி குரோஷியா பக்கம் சாயத்தொடங்கியது.
குரோஷியா ஆதிக்கம்:
போட்டியின் இரண்டாவது பாதியில் குரோஷியா மூன்றாவது கோல் அடித்து போட்டியை மொத்தமுமாக தன் பக்கம் சாய்த்துக்கொள்ள முயற்சித்துக்கொண்டே இருந்தது. அதேபோல் மொரோக்கோ அணியும் இரண்டாவது கோலை அடிக்க முயற்சி செய்துகொண்டே இருந்தது. போட்டியின் 83 வது நிமிடத்தில் மொரோக்கோ அணியின் செலீம் அமைய்லாவுக்கு “yellow card ” வழங்கப்பட்டது. அதன் பின்னர் போட்டி மிகவும் சூடு பிடித்தது.
90 நிமிடங்கள் முடிந்த பின்னரும் போட்டி குரோஷியாவை விட்டு விலகவில்லை. எக்ஸ்ட்ரா டைமிலும் போட்டி முழுவதும் குரோஷியாவின் பக்கமே இருந்தது. கடைநி நிமிடத்தில் சிறப்பான கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பு நூலிழையில் நழுவிப் போகவே போட்டி குரோஷியாவுக்கு சாதகமாகவே முடிந்தது. போட்டியை குரோஷியா 2 - 1 என்ற கணக்கில் வென்று 2022 கால்பந்து உலகக்கோப்பையின் போட்டியின் மூன்றாவது இடத்தினை பிடித்தது. 2018ஆம் ஆண்டு குரோஷிய அணி இரண்டாவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.