FIFA WORLDCUP 2022:  கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் அர்ஜெண்டினா இன்று தனது முதல் போட்டியில் சவுதி அரேபியாவுடன் மோதவுள்ளது. 


கால்பந்து திருவிழா:


22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக் கிழமை கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தார் நாடே கால்பந்து திருவிழாவில் மூழ்கிக்கொண்டுள்ளது. மொத்தம் 29 நாட்கள் நடக்கும் போட்டியின் மூன்றாவது நாளான இன்று மொத்தம் நான்கு போட்டிகள் நடைபெறுகிறது. சி மற்றும் டி பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளுக்கு இன்று போட்டிகள் நடைபெறுகிறது. 


சி பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளுக்கும் இந்த உலகக் கோப்பையில் முதலாவது போட்டி இது தான். சர்வதேச தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள அர்ஜெண்டினாவும், 51வது இடத்தில் சவுதி அரேபியாவும் உள்ளன. இதுவரை நேருக்கு நேர் இரு அணிகளும் 4 முறை சர்வதேச போட்டிகளில் களம் கண்டுள்ளன. இதில் 2 போட்டிகளில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி லுசயில் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. 


அர்ஜெண்டினா


இதுவரை இருமுறை கோப்பைகளை வென்று, இம்முறை கோப்பையை வெல்லும் அணியாக இருக்கக் கூடிய அர்ஜெண்டினா அணி, சவுதி அரேபியாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் பலமான அணி என்றே கூற வேண்டும். மேலும் மிகவும் அனுபவம் வாய்ந்த அணியாக உள்ள அர்ஜெண்டினாவை அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி உலகின் தலை சிறந்த வீரராக விளங்குகிறார்.


மெஸ்ஸியே அணிக்கு பெரும் பலமாக இருக்கும் போது, சவுதி அரேபியாவின் ஒட்டு மொத்த நோக்கமாக மெஸ்ஸியை முடக்குவதாகவே இருக்கும். ஆனால் மிகவும் சிறிய அணி என்பதால் மெஸ்ஸி களம் இறங்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.  அர்ஜெண்டினா அணி தனது கடைசி ஐந்து போட்டிகளில் தோல்வியைச் சந்திக்காமல் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 


சவுதி அரேபியா


சவுதி அரேபியாவைப் பொறுத்தமட்டில் கோப்பையை வெல்வதை கனவாகக் கொண்டுள்ள பல அணிகளில் ஒன்று. கடந்த பத்து ஆண்டுகளில் சவுதி அணி அர்ஜெண்டினாவை நேரடியாக எதிர்கொள்ளவில்லை என்றாலும், தரவரிசை 48க்கு கீழ் உள்ள மற்ற அணிகளுடன் மிகவும் சிறப்பாக விளையாடி உலகக் கோப்பைத் தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. அணி தனது கடைசி ஐந்து போட்டிகளில் ஒன்றில் வெற்றியும், ஒன்றில் டிராவும், மூன்றில் தோல்வியும் அடைந்துள்ளது. 


இதுவரை இரு அணிகள் நேருக்கு நேர்


ஜூலை 6, 1988; 2-2 (போட்டி டிரா)


ஜூலை 16, 1988; 2-0 (அர்ஜெண்டினா வெற்றி)


அக்டோபர் 20, 1992; 1-3 ( அர்ஜெண்டினா வெற்றி)


நவம்பர் 14; 0-0 (போட்டி டிரா)


இரு அணிகளும் இதுவரை உலகக் கோப்பை போட்டிகளில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது இல்லை. 


அணி விபரம்


அர்ஜென்டினா அணி :  மார்டினெஸ்; மோலினா, ரோமெரோ, ஓட்டமெண்டி, டாக்லியாஃபிகோ; டி பால், பரேடிஸ், கோம்ஸ்; மெஸ்ஸி, மார்டினெஸ், டி மரியா


சவுதி அரேபிய அணி: அல்-ஓவைஸ்; அல்-புராய்க், அல்-அம்ரி, அல்-புலாஹி, அல்-ஷஹ்ரானி; கண்ணோ, அல்-மல்கி; அல்-ஷெஹ்ரி, அல்-ஃபராஜ், அல்-தஸ்வரி; அல்-புரைகான்