ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலும், ஐரோப்பியா நாடான நெதர்லாந்தும் தோஹாவில் உள்ள அல் துமாமா ஸ்டேடியத்தில் மோதின. நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் செனகலை வீழ்த்தியது.
தரவரிசையில் 18-ஆவது இடத்தில் உள்ள செனகல், தரவரிசையில் 8-ஆவது இடத்தில் உள்ள நெதர்லாந்துக்கு இடையிலான ஆட்டம் பரபரப்பாக இருந்தது.
முதல் பாதி முழுவதும் ஒரு கோல் கூட இரு அணிகளும் போடாமல் இருந்தது. நெதர்லாந்து அணிக்கு கடும் சவாலாக விளங்கியது செனகல்.
நெதர்லாந்து வசமே ஆட்டத்தின் பெரும்பாலான நேரங்களில் கால்பந்து இருந்தது. இருப்பினும், கோலுக்குச் செல்லாமல் லாவகமாக தடுப்பதில் செனகல் வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடினர்.
முதல் கோல்
கால்பந்தாட்டத்தைப் பொருத்தவரை கடைசி 10 நிமிடங்கள் எப்போதும் முக்கியமான நிமிடங்களாக இருக்கும். அதிலும் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் போடவில்லை என்றால் கடைசி நிமிடங்கள் எப்போதும் பரபரப்பானவை. அந்த வகையில் ஜெர்ஸி எண் 8-ஐ கொண்ட நடுகள வீரர் கோடி காக்போ அற்புதமான கோலை தலையால் முட்டி வலைக்குள் செலுத்தினார்.
இரண்டாவது கோல்
ஆட்டத்தில் கூடுதல் நேரத்தில் இரண்டாவது கோலை நெதர்லாந்து அடித்தது. அந்த கோலை டேவி கிளாசன் அடித்தார்.
நெதர்லாந்து அணி 1974, 1978, 2010 ஆகிய ஆண்டுகளில் பைனலுக்கு முன்னேறி ரன்னர்-அப் ஆனது. கடந்த 2014-ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்தை பிடித்து வலிமையான அணியாகவே திகழ்கிறது. இதனால், இந்த ஆட்டத்தில் செனகல் அணிக்கு சற்று கடினமாகவே இருந்தது.
செனகல் அணியின் பிரதான வீரரான சேடியோ மனே, 2 வாரங்களுக்கு முன் கிளப் அணிக்காக விளையாடியபோது காலில் காயம் ஏற்பட்டது. காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்ததால், அவரால் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க இயலவில்லை. இது அந்த அணிக்கு பின்னடைவாக ஆனது.
மகேப்டன் விர்ஜில் வேன் டிஜ்க் தலைமையிலான நெதர்லாந்து அணி முதல் 20 நிமிடங்கள் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இதற்கு முன்பு
ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நெதர்லாந்து அணி லீக் ஆட்டங்களில் இதுவரை தோற்றது கிடையாது. இதுவரை 6 வெற்றிகளையும், 2 டிராவை நெதர்லாந்து அணி செய்துள்ளது. அதேநேரம், செனகல் அணி, இதற்கு முன்பு இரு முறையும் ஓபனிங் மேட்சில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு முன்பு செனகல், உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் 2002ஆம் ஆண்டு 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸையும், 2018ஆம் ஆண்டு போலந்தை 2-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது. இது செனகல் அணிக்கு உலகக் கோப்பையில் பங்கேற்பது மூன்றாவது முறையாகும். 2002 ஆம் ஆண்டில் காலிறுதி வரை செனகல் முன்னேறியது. 2018-இல் குரூப் ஆட்டத்திலேயே தோல்வி அடைந்து வெளியேறியது.
நெதர்லாந்து அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கடைசியாக விளையாடி 14 ஆட்டங்களில் 11 முறை வெற்றி பெற்றுள்ளது. 1994ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
அல் துமாமா ஸ்டேடியம் (Al Thumama Stadium)
இந்த ஸ்டேடியத்தில் 40 ஆயிரம் பேர் வரை இந்த ஸ்டேடியத்தில் அமர்ந்து போட்டியைக் கண்டு ரசிக்க முடியும். மத்திய கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஆண்கள் அணியும் தொப்பியைப் போன்று இந்த ஸ்டேடியத்தின் டிசைன் இருக்கும். இங்கு மொத்தம் 8 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. உலகக் கோப்பை முடிந்த பிறகு, இருக்கைகள் பாதியாக குறைக்கப்படவுள்ளது. மேலும், இங்கிருந்து அகற்றப்படும் இருக்கைகள் பிற நாடுகளுக்கு இலவசமாக அளிக்கப்படவுள்ளது.