22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக் கிழமை கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தார் நாடே கால்பந்து திருவிழாவில் மூழ்கிக்கொண்டுள்ளது. மொத்தம் 29 நாட்கள் நடக்கும் போட்டியின் மூன்றாவது நாளான இன்று மொத்தம் நான்கு போட்டிகள் நடைபெறுகிறது. சி மற்றும் டி பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளுக்கு இன்று போட்டிகள் நடைபெறுகிறது. 


இன்றைய போட்டிகள்



  • அர்ஜெண்டினா - சவுதி அரேபியா

  • டென்மார்க் - துனிசியா

  • மெக்சிகோ - போலந்து

  • பிரான்ஸ் ஆஸ்திரேலியா


அர்ஜெண்டினா - சவுதி அரேபியா


சி பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளுக்கும் இந்த உலகக் கோப்பையில் முதலாவது போட்டி இது தான். சர்வதேச தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள அர்ஜெண்டினாவும், 51வது இடத்தில் சவுதி அரேபியாவும் உள்ளன. இதுவரை நேருக்கு நேர் இரு அணிகளும் 4 முறை சர்வதேச போட்டிகளில் களம் கண்டுள்ளன. இதில் 2 போட்டிகளில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி லுசயில் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. 


டென்மார்க் - துனிசியா


இன்றைய நாளின் இரண்டாவது போட்டியில் டென்மார்க் - துனிசியா அணிகள் மோதவுள்ளன. டி பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும் உலகத் தரவரிசையில் டென்மார்க் 10வது இடத்திலும், துனிசியா 30வது இடத்திலும் உள்ளன. இதுவரை இரு அணிகளுக்கும் இடையில் ஒரேயொரு போட்டி மட்டுமே நடந்துள்ளது. இதில் டென்மார்க் அணி வெற்றி பெற்றுள்ளது. மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி கத்தாரில் உள்ள எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் நடைபெறுகிறது. 


மெக்சிகோ - போலந்து


சி பிரிவில் இடம் பெற்றுள்ள மெக்சிகோ - போலந்து அணிகள் இன்று நேருக்கு நேர் மோதவுள்ளன. இதில் மெக்சிகோ 13வது இடத்திலும், போலந்து 26வது இடத்திலும் உள்ளன. இரு அணிகளும் இதுவரை 8 முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 3முறை வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. மைதானம் 974ல் நடக்கவுள்ள இந்த போட்டி இரவு 9.30 மணிக்கு தொடங்கவுள்ளது. 


பிரான்ஸ் - ஆஸ்திரேலியா


பிரிவு டி-யில் இடம் பெற்றுள்ள பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதுவரை 5 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பிரான்ஸ் 3 முறையும் ஆஸ்திரேலியா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. பிரான்ஸ் அணி 4வது இடத்திலும் ஆஸ்திரேலிய அணி 38வது இடத்திலும் உள்ளன. 


போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.