2026 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்றுகள் பரவலாக நடைபெற்று வருகின்றது. வழக்கத்தை விட 2026ஆம் ஆண்டு  அதிகப்படியான அணிகள் அதாவது 48 அணிகள் களமிறங்கவுள்ளதால் தகுதிசுற்றுகளில் விளையாடும் அணிகளும் போட்டிகளும் அதிகமாகி உள்ளது. 2026ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தை கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா நடத்தவுள்ளது. 


ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரக்கானா ஸ்டேடியத்தில் ரசிகர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட மோதல் காரணமாக பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஃபிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தின் தொடக்கம் 30 நிமிட தாமதம் ஏற்பட்டது. தென் அமெரிக்க கால்பந்தின் இரண்டு நாடுகளுக்கு இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி திட்டமிடப்பட்ட நேரத்தில் தொடங்கவிருந்தது, ஆனால் அரங்கில் ஏற்பட்ட பிரச்னைகளின் காரணங்களால் 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கப்பட்டது. 


பிரேசில் மற்றும் அர்ஜென்டினா வீரர்கள் அந்தந்த தேசிய கீதங்கள் இசைக்கப்படுவதற்கு முன்னதாக மைதானத்தில் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.  அதாவது பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ரசிகர்களின் ஒரு பிரிவினர் சராமாறியாக  தாக்கிக் கொண்டனர். ஆடுகளத்தில் இருந்த கால்பந்து வீரர்கள் இந்த மோதலைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.






கூட்ட நெரிசலை தணிக்க காவல்துறையினர் லத்தி சார்ஜ் நடத்தியதால், மைதானம் மிகவும் பதற்ற நிலைக்குச் சென்றது.  இணையத்தில் வைரலாகி வரும் காட்சிகளைப் பார்க்கும்போது மைதானத்தின் ஒரு முனையில் அர்ஜென்டினா ரசிகர்களை போலீசார் தடிகளால் சராமாறியாக தாக்குவதைக் காண முடிந்தது. இது வெளிப்படையாக லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணிக்கு, தங்களுக்கு ஆதரவளிக்க வந்த ரசிகர்கள் தாக்கப்படுவதை பார்க்கமுடியாமல் ஒட்டுமொத்தமாக மைதானத்தை விட்டு வெளியேறினர். 


அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி சக வீரர்களுடன் ஆடுகளத்தை விட்டு வெளியேற முடிவு செய்வதற்கு முன், சண்டையை சுட்டிக்காட்டி, போட்டி அதிகாரிகளுடன் ஒரு வார்த்தை பேசியதாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. 


அதாவது மெஸ்ஸி, "நாங்கள் விளையாடவில்லை, நாங்கள் வெளியேறுகிறோம்," என்று தனது அணி வீரர்களுடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறும்போது கூறியதாக கூறப்படுகின்றது. ஆனால் அர்ஜெண்டினா வீரர்கள் ட்ரெஸ்ஸிங் அறைக்குச் சென்று பின்னர் மைதானத்திற்கு திரும்பினர்.  இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 






இரு அணிகளும் முந்தைய தகுதிச் சுற்றில் தோல்விகளுக்குப் பிறகு விளையாடுகின்றன; கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் பிரேசில் 2-1 என தோற்றது. அதேபோல் 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அர்ஜெண்டினா உருகுவேயிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.


10 அணிகள் கொண்ட தென் அமெரிக்க தகுதிச் சுற்றில் அர்ஜென்டினா 5 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. உருகுவே 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கொலம்பியா ஒன்பது மற்றும் வெனிசுலா எட்டாவது இடத்தில் உள்ளது.  பிரேசில் ஏழு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.