ஒட்டுமொத்த உலகத்தில் அதிக மக்களால் விளையாடப்படும் விளையாட்டு அதிக மக்களால் விரும்பப்படும் விளையாட்டு என்றால் அது கால்பந்து போட்டிதான். பொதுவாகவே கால்பந்து உலகக்கோப்பை போட்டி நடைபெறும்போது உலகக் கோப்பையை நடத்தும் நாட்டினைத் தவிர மற்ற நாடுகள் அனைத்தும் தகுதிச் சுற்றினை விளையாடிவிட்டுத்தான் உலகக் கோப்பைக்குள் களமிறங்க முடியும்.
உலகக்கோப்பைத் தகுதி:
இந்த தகுதிச் சுற்றில் பலமான அணியாக இருந்து தோல்விகளைத் தழுவி, உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியவில்லை என்றால் அந்த அணியால் உலகக் கோப்பைக்குள் களமிறங்க முடியாது. அது பலமுறை கோப்பை வென்ற அணியாக இருந்தாலும் சரி.
இந்தியா போன்ற நாடுகளில் கால்பந்து போட்டி என்பது இன்னும் மக்கள் மத்தியில் போதுமான வரவேற்பைப் பெறவில்லை என்றே கூறவேண்டும். அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள கேரளா மற்றும் கொல்கத்தா மாநிலங்களில்தான் அதிகப்படியான கால்பந்து ரசிகர்கள் உள்ளனர். ஆனால் மற்ற மாநிலங்களில் கால்பந்து விளையாட்டிற்கு சமீப காலங்களாகத்தான் வரவேற்பு கிடைத்துள்ளது. அதுவும் குறிப்பாக இந்தியாவில் ஐ.எஸ்.எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் நடத்தத் தொடங்கியதில் இருந்து இளைஞர்கள் மத்தியில் கால்பந்து விளையாட்டு மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆர்வத்தினை ஒட்டுமொத்த நாட்டின் ஆர்வமாக மாற்ற ஒரு அரியவாய்ப்புதான் இந்திய கால்பந்து அணி உலகக் கோப்பையில் விளையாடுவது.
ஆசிய கண்டத்தில் 8 அணிகள்:
இம்முறை வழக்கத்தினை விடவும் அதிகப்படியான அணிகளை உலகக்கோப்பையில் பங்கேற்க வைக்க ஃபிஃபா திட்டமிட்டுருப்பதால் இந்திய அணிக்கு வாய்ப்புகள் உள்ளது. அதாவது வழக்கமாக ஃபிஃபா உலகக் கோப்பையில் 32 அணிகள் விளையாடும். ஆனால் இம்முறை 48 அணிகளை களமிறக்க திட்டமிட்டு அதற்காக தகுதிச் சுற்றுகளை நடத்தி வருகின்றது. இதில் ஆசிய கண்டம் சார்பில் இம்முறை 8 அணிகள் களமிறங்க வாய்ப்புள்ளது.
தகுதிச் சுற்றுகளைப் பொறுத்தவரையில் ஒரு குழுவில் மொத்தம் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதவேண்டும். இதில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணி ஃபிஃபா உலகக் கோப்பை 2026க்கு தகுதி பெறும். இந்நிலையில் இதுவரை நடந்த தகுதிச் சுற்றில் இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இந்திய அணி தனது முதல் தகுதிச் சுற்று போட்டியில் குவைத் அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதேபோல் அடுத்த போட்டியில் கத்தார் அணியிடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியைச் சந்தித்தது.
தகுதி பெறுமா இந்தியா?
மொத்தம் உள்ள 6 போட்டிகளில் இந்தியா இதுவரை 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி தான் இடம்பெற்றுள்ள குழுவின் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா அணி இன்னும் தனக்கு மீதமுள்ள 4 போட்டிகளிலும் விளையாடி புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களுக்குள் இடம்பிடித்து விட்டால் இந்திய அணியால் எளிதில் ஃபிஃபா உலகக்கோப்பைக்கு தகுதி பெற்று விட முடியும். அதாவது இந்திய அணி ஆஃப்கானிஸ்தான் உடனான இரண்டு போட்டிகள், குவைத்துடன் உள்ள ஒரு போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று விட்டாலே போதும் உலகக் கோப்பையில் களமிறங்கிவிடும்.
அதேநேரத்தில் பலமான கத்தார் அணியை வீழ்த்தவும் முயற்சி செய்ய வேண்டும். இதில், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 21 மற்றும் 26ஆம் தேதி இந்தியா களமிறங்கவுள்ளது. அதேபோல் ஜூன் மாதம் 6ஆம் தேதி குவைத் அணிக்கு எதிராகவும் களமிறங்கவுள்ளது. அதேபோல் கத்தார் அணிக்கு எதிராக ஜூன் 11ஆம் தேதி விளையாடவுள்ளது.