ஃபிபா சர்வதேச கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தி வருகிறது. தற்போது நடைபெற இருக்கும் இந்த தொடரானது நேற்று கோலகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் விளையாட இருக்கின்றனர். நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் உலகக் கோப்பையை நடத்தும் கத்தார் அணியும், ஈகுவடார் அணியும் நேருக்குநேர் மோதியது. இந்த போட்டியில் ஈகுவடார் அணி 2-0 என்ற கணக்கில் கத்தார் அணியை வீழ்த்தி தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக உலகக் கோப்பை தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது.
இன்றைய போட்டி விவரம்:
இங்கிலாந்து vs ஈரான் மாலை: 6.30 மணி
செனிகல் vs நெதர்லாந்து இரவு 9.00 மணி
இந்திய கால்பந்து அணி:
இந்திய கால்பந்து அணியை பொறுத்தவரை இந்தாண்டு பெரும் சறுக்கல்களை மட்டுமே கண்டு வந்தது. இந்திய கால்பந்து கூட்டமைப்பில் பல்வேறு தலையீடுகள் இருந்ததாக கூறி சில நாட்கள் ஃபிபா கூட்டமைப்பால் தடை செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த தடையும் நீக்கப்பட்டது. தொடர்ந்து, அக்டோபர் 6 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஃபிஃபா தரவரிசையில் இந்திய அணி 106 வது இடத்தில் உள்ளது.
வருகின்ற 2023 ஆம் ஆண்டு AFC ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள இந்திய கால்பந்து அணி கடைசியாக செப்டம்பர் மாதம் இரண்டு சர்வதேச நட்பு போட்டிகளில் விளையாடியது. அதில், சிங்கப்பூருடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்த இந்திய அணி, வியட்நாமிடம் 0-3 என தோல்வியடைந்தது. கடைசியாக, கடந்த மார்ச் மாதம் முதல் இந்திய கால்பந்து அணி 106வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவும் ஃபிபா உலகக் கோப்பை வரலாறும்:
கடந்த 2019ம் ஆண்டு முதல் ஃபிபா உலகக் கோப்பை தகுதி சுற்றில் இந்திய அணி 8 போட்டிகளில் விளையாடி 4 டிரா உள்பட 1 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றது. அதெபோல், இந்திய அணி மற்ற தொடர்களில் 48 போட்டிகளில் விளையாடி ஒன்பது போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது ஃபிபா உலகக் கோப்பையில் போதுமானதாக கருதப்படவில்லை.
1950 - ஃபிபா உலகக் கோப்பையில் தகுதிபெற்றும் விளையாடாத இந்திய அணி:
அன்றைய காலக்கட்டத்தில் இந்திய அணி ஃபிபா உலகக் கோப்பை தொடரை விட ஒலிம்பிக் தொடருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தது. 1950ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலகக் கோப்பையில் ஸ்வீடன், இத்தாலி, பராகுவே ஆகிய அணிகளுடன் இந்தியா விளையாட இருந்தது. ஆனால், இந்திய அணி பாரம்பரிய கால்பந்து காலணிகளை அணியாமல், வெறுங்காலுடன் விளையாடுவதை அறிந்த ஃபிஃபா, போட்டியில் பங்கேற்க இந்தியாவுக்கு தடை விதித்தது. அன்றுமுதல் இன்றுவரை உலகக் கோப்பை தொடரில் இந்திய கால்பந்து அணி ஒருமுறை கூட பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.