இந்த நிலையில், உலககோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலை கீழே காணலாம்.



  1. மிரோஸ்லவ் க்ளோஸ்


ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் மிரோஸ்லவ் க்ளோஸ் இதுவரை நடைபெற்ற உலககோப்பை கால்பந்து போட்டிகளிலே அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். அவர் இதுவரை 4 உலககோப்பையில் ஆடி 16 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.




2002ம் ஆண்டு முதன்முறையாக உலககோப்பை கால்பந்தில் க்ளோஸ் ஆடினார். 2002, 2006, 2010 மற்றும் 2014 ஆகிய நான்கு உலககோப்பை கால்பந்து போட்டிகளில் ஆடியுள்ள க்ளோஸ் சவுதி அரேபிய அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்தும் அசத்தியுள்ளார்.



  1. ரொனால்டோ :


கால்பந்தின் ஜாம்பவானாகிய பிரேசில் நாட்டின் மிகவும் புகழ்பெற்ற கால்பந்து வீரர்களில் ஒருவர் ரொனால்டோ. உலககோப்பை போட்டிகளில் இதுவரை 19 ஆட்டங்களில் ஆடியுள்ள ரொனால்டோ 15 கோல்களை அடித்துள்ளார். 2002ம் ஆண்டு ரொனால்டோ தலைமையில் பிரேசில் அணி உலககோப்பையை கைப்பற்றி 5வது முறையாக உலககோப்பை கால்பந்தை முத்தமிட்டது. உலககோப்பையில் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் தங்க காலணி விருதையும் ரொனால்டோ கைப்பற்றியுள்ளார்.





  1. ஜெர்ட் முல்லர் :


ஜெர்மனி அணிக்காக ஆடிய தலைசிறந்த கால்பந்து வீரர்களில் முக்கியமானவர் ஜெர்ட் முல்லர். உலககோப்பை போட்டிகளில் வெறும் 13 ஆட்டங்களில் மட்டுமே ஆடியுள்ள முல்லர் 14 கோல்களை அடித்துள்ளார். 1970ம் ஆண்டு உலககோப்பையில் இரண்டு முறை ஹாட்ரிக் கோல் விளாசியுள்ளார். அந்த தொடரில் கோல்டன் பூட் எனப்படும் தங்க காலணி விருதையும் வென்றார். அதற்கு அடுத்த உலககோப்பையில் இறுதிப்போட்டியில் 2 கோல்கள் அடித்து தனது நாட்டிற்காக உலககோப்பையையும் வென்று கொடுத்தார்.



  1. ஜஸ்ட் போன்டெய்ன் :




1950களின் பிற்பகுதியில் தலைசிறந்து விளங்கிய கால்பந்து வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் போன்டெய்ன். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் வெறும் 6 போட்டிகளில் மட்டுமே ஆடி 13 கோல்கள் விளாசியுள்ளார். 1958ம் ஆண்டு உலககோப்பையில் மட்டுமே போன்டெய்ன் ஆடியுள்ளார். அந்த தொடரில் பராகுவே அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோலும் விளாசியுள்ளார். காயங்கள் காரணமாக தலைசிறந்த வீரரான இவர் 28 வயதிலே தனது கால்பந்து வாழ்க்கையில் இருந்து விடைபெற்றார்.



  1. பீலே :


உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான பீலே இதுவரை உலககோப்பையில் 14 போட்டிகளில் ஆடி 12 கோல்களை விளாசியுள்ளார். 1958ம் ஆண்டு தான் அறிமுகமாகிய போட்டியிலே 6 கோல்களை விளாசினார். 1962ம் ஆண்டும் பிரேசில் உலககோப்பை பட்டத்தை வென்றது. 1966ம் ஆண்டு பிரேசில் எதிர்பாராத விதமாக குரூப் சுற்றிலே வெளியேற. 1970ம் ஆண்டு பீலே எனும் சூறாவளியால் பிரேசில் மீண்டும் உலககோப்பையை வென்றது. உலககோப்பை சரித்திரத்திலே பீலே எனும் சூறாவளி சுழன்றடித்த காலம் எப்போதும் மறக்க முடியாத பொற்காலம் என்பது குறிப்பிடத்தக்கது.





  1. ஜர்ஜென் க்ளின்ஸ்மன், சான்டூர் கோக்சிஸ் :


ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜர்ஜென் க்ளின்ஸ்மன் மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த சான்டூர் கோக்சிஸ் தலா 11 கோல்களை உலககோப்பைத் தொடரில் அடித்து 6வது இடத்தில் உள்ளனர். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற க்ளின்ஸ்மன் மூன்று உலககோப்பையில் ஆடி 11 கோல்களை விளாசியுள்ளார். இவற்றில் 1990ல் ஜெர்மனி சாம்பியன் பட்டத்தை வென்றது.


ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த கோக்சிஸ் 1954ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை போட்டித் தொடரில் மட்டுமே ஆடி 11 கோல்களை விளாசியுள்ளார்.


இவர்களுக்கு அடுத்த இடங்களில் அர்ஜெண்டினாவின் கேப்ரியல் படிஸ்டுடா, பெருவின் டியோபிலோ குபிலாஸ், இங்கிலாந்தின் கேரி லைனிகர், ஜெர்மனியின் தாமஸ் முல்லர், போலந்தின் லாடோ, ஜெர்மனியின் ஹெல்முட் ராஹ்ன் தலா 10 கோல்களை உலககோப்பை கால்பந்து தொடர்களில் விளாசியுள்ளனர்.