நடப்பு உலக சாம்பியனான பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டோபர் நகுங்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நேற்று மாலை பயிற்சின்போது ரியல் மாட்ரிட் மிட்ஃபீல்டர் எட்வர்டோ கேமவிங்கா கொண்டு வந்த பந்தை கிறிஸ்டோபர் நகுங்கு வாங்க முயற்சி செய்தபோது எதிர்பாராதவிதமாக காலில் காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் பயிற்சியின்போது மைதானத்திலேயே சுருண்டுவிழுந்த கிறிஸ்டோபர் நகுங்கு துடித்துடித்தார். உடனடியாக வலி இருப்பதாக சமிக்ஞை செய்து சிகிச்சை பெற பயிற்சி மைதானத்தை விட்டு வெளியேறினார். மாலையில் ஸ்கேன் எடுத்ததில் துரதிஷ்டவசமாக சுளுக்கு என்று தெரியவந்தது.






கிறிஸ்டோபர் நகுங்கு ஆர்பி லீப்ஜிக்கிற்காக 15 போட்டிகளில் விளையாடி 12 கோல்கள் அடித்தார். 


2022 மார்ச் மாதத்தில் ஐவரி கோஸ்ட் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான  போட்டிகளுக்காக முதன்முறையாக கிறிஸ்டோபர் நகுங்கு பிரான்ஸ் அணிக்காக அறிமுகமானார். தொடர்ந்து, அணிக்கான அவரது சிறந்த பங்களிப்பால் கடந்த நவம்பர் 9 ம் தேதி கர்த்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை பிரான்ஸ் அணியில் 25 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்தார். நேற்று பயிற்சியின் போது எட்வர்டோ கேமவிங்காவை எதிர்கொண்டபோது மோதியதில் அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் பிரான்ஸ் உலகக் கோப்பை அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 


உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணி எதிர்கொள்ளும் போட்டிகள்:


பிரான்ஸ் இன்று (நவம்பர் 16, புதன்கிழமை) உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க கத்தார் நாட்டிற்கு செல்கிறது. குழு D யில் உள்ள பிரான்ஸ் அணி வருகிற நவம்பர் 22 ம் தேதி தங்கள் தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அதேபோல், நவம்பர் 26 ம் தேதி டென்மார்க்கையும், நவம்பர் 30 ம் தேதி துனிசியாவையும் எதிர்த்துப் போரிடுகின்றனர்.


நடப்பு சாம்பியன் பிரான்ஸ்:


கடந்த 2018ல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில், முன்னாள் நடப்பு சாம்பியனாக ஜெர்மனி அணி களம் இறங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனி அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. அதன் பின்னர் கோப்பையை வெல்லும் அணிகளாக இருந்த போர்ச்சுக்கல் மற்றும் அர்ஜெண்டினா, கொலம்பியா மற்றும் ஸ்பெயின் அணிகள் ரவுண்டு 16 சுற்றில் வெளியேறின. 


அதனைத் தொடர்ந்து பலமான அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரோஷிய அணிகள் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷிய அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலக சாம்பியன் ஆனது. இப்படி பெரிய பெரிய ஜாம்பவான்களை வீழ்த்தி உலக சாம்பியன் ஆன பிரான்ஸ் அணி இந்தமுறை கோப்பையை வெல்ல முழு முனைப்புடன் களம் இறங்கியுள்ளது. ஆனால் அணியின் வீரர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அணிக்கு அது பின்னடைவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.