22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகளில் விளையாடுகின்றன.


மொத்தம் 29 நாட்கள் நடக்கும் போட்டியின் ஐந்தாவது நாளான இன்று மொத்தம் 4 போட்டிகள் நடைபெறுகிறது. முதலாவது நாள் ஆட்டத்தில் கத்தார் அணியை 0-2 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் வீழ்த்தியது.


இரண்டாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஈரானை 6-2 என்ற கோல் கணக்கிலும், நெதர்லாந்து அணி செனகலை 0-2 கோல் கணக்கிலும் வென்றது. அமெரிக்கா-வேல்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் டிரா ஆனது.


குரூப் சி பிரிவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டம், அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஆசிய அணியான சவுதி அரேபியா வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. டென்மார்க் துனியா ஆட்டம் கோல்கள் எதுவுமின்றி டிரா ஆனது. மற்றொரு ஆட்டத்தில் மோதிய மெக்ஸிகோ-போலந்து இடையிலான ஆட்டமும் டிரா ஆனது.


குரூப் டி பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது. பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனியும் ஜப்பானும் மோதின. இதில், ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.


ஸ்பெயின் அணி 7 கோல்களை வலைக்குள் தள்ளி, கோஸ்டாரிகாவை வீழ்த்தியது. கால்பந்தைப் பொருத்தவரை கோல்கள் தான் வெற்றியைத் தீர்மானிக்கிறது.


அந்த வகையில் இதுவரை நடைபெற்ற 21 உலகக் கோப்பைத் தொடர்களிலும் எந்த அணி அதிக கோல்களைப் பதிவு செய்துள்ளது என்று பார்க்கலாம் வாருங்கள். 5 முறை சாம்பியனான பிரேசில் அணி தான் இதுவரை 229 கோல்களை பதிவு செய்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 226 கோல்களுடன் 4 முறை சாம்பியனான ஜெர்மனியும் உள்ளன.


தரவரிசையில் 3 ஆவது இடத்தில் உள்ள அர்ஜென்டினா 137 கோல்களையும், இத்தாலி 128 கோல்களை பதிவு செய்துள்ளன.


பிரான்ஸ் (120 கோல்கள்), ஸ்பெயின் (99 கோல்கள்),  இங்கிலாந்து (91 கோல்கள்), ஹங்கேரி (87 கோல்கள்), உருகுவே (87 கோல்கள்), நெதர்லாந்து (86 கோல்கள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


உலகக் கோப்பையில் அதிக கோல்களை அடித்த வீரர்கள்


ஜெர்மனி அணி முன்னாள் கால்பந்து வீரர்  மிரோஸ்லவ் க்ளோஸ் தான் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர்.


FIFA World Cup : உலககோப்பை கால்பந்து: வெற்றியுடன் தொடங்குமா பிரேசில், போர்ச்சுக்கல்..?
 
அவர் உலகக் கோப்பையில் 24 ஆட்டங்களில் விளையாடி 16 கோல்களை வலைக்குள் செலுத்தி இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். பிரேசில் வீரர் ரொனால்டோ 19 ஆட்டங்களில் விளையாடி 15 கோல்களுடன் இரண்டாவது இடத்திலும், மற்றொரு ஜெர்மனியைச் சேர்ந்த ஜெர்ட் முல்லர் 13 ஆட்டங்களில் விளையாடி 14 கோல்களைப் பதிவு செய்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.


பிரான்ஸ் முன்னாள் வீரர் ஜஸ்ட் ஃபான்டைன் 6 ஆட்டங்களில் விளையாடி 13 கோல்களையும், பிரேசில் முன்னாள் வீரர் பீலே 14 ஆட்டங்களில் விளையாடி 12 கோல்களை வலைக்குள் செலுத்தியுள்ளனர்.