22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் பங்கேற்றுள்ளன. 64 போட்டிகள் நடைபெறவுள்ளன. இன்று 5ஆவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் பங்கு பெற்றுள்ள சில அணிகள் சில விஷயங்களுக்காக எதிர்ப்பு ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு நூதன போராட்டத்தை முன்னெடுத்தன.
தேசிய கீதம் பாட மறுப்பு
கடந்த திங்கள்கிழமை (நவம்பர் 21) ஈரான், இங்கிலாந்து அணிகள் இடையே ஆட்டம் நடைபெற்றது. எந்தவொரு விளையாட்டுப் போட்டு தொடங்குவதற்கு முன்பும் இரு நாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்படும். ஆனால், ஈரான் நாட்டு அணி வீரர்கள் தேசிய கீதம் பாட மறுத்துவிட்டனர்.
ஈரான் அரசுக்கு எதிரான உள்நாட்டில் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர்கள் தேசிய கீதத்தை பாட மறுத்தனர்.
மாஷா அமினி உயிரிழப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் போராட்டம் வெடித்து வருகிறது.
இதே உலகக் கோப்பைத் தொடரில் நேற்று ஜெர்மனி-ஜப்பான் அணிகள் இடையே கால்பந்தாட்டம் நடைபெற்றது. அப்போது ஜெர்மன் அணியினர் நூதான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உலகக் கோப்பை நடைபெற்றுவரும் கத்தாரில் ஓரினச் சேர்க்கை என்பது சட்டவிரோதமானதாகும். சில அணிகள் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் "ஒன் லவ்" என்ற பெயரில் வானவில் நிறத்தில் பட்டை அணிந்து விளையாட முடிவு செய்தன.
ஆனால், அவ்வாறு அணிந்து விளையாடுவது நடத்தி விதி மீறலாகும் என்றும் அவ்வாறு செய்யும் அணிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஃபிபா எச்சரித்துள்ளது. இந்நிலையில், ஜெர்மனி அணியினர் நேற்றைய ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக, மைதானத்தில் தங்களது வாயை கைகளால் முடியவாறு போட்டோவுக்கு காட்சி அளித்தனர்.
"வானவில் பட்டையை அணிவதற்கு தடை விதிப்பது எங்களது பேச்சுரிமையை பறிப்பதற்கு சமம். இந்த விவகாரத்தில் எங்களது நிலைப்பாட்டில் மாற்றமில்லை" என்று ஜெர்மனி கால்பந்து சம்மேளனம் தெரிவித்தது.
இதுபோன்ற போராட்டங்கள் உலகக் கோப்பை பந்தில் நடைபெறுவதும் முதல்முறையல்ல. இதற்கு முன்பும் இதுபோன்று நடந்துள்ளது.
1930 ஆம் ஆண்டு முதல்முறையாக உலகக் கோப்பையை வென்ற தென் அமெரிக்காவைச் சேர்ந்த அணியான உருகுவே, இத்தாலியில் 1934ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது. இதற்கு காரணம், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் உருகுவேக்கு வந்து போட்டியில் பங்குபெறுவதில் ஆர்வம் காட்டவில்லை.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் நடைபெற்ற அடுத்த உலகக் கோப்பையில் உருகுவே பங்கேற்கவில்லை. நடப்பு சாம்பியன் அணி ஒன்று, அடுத்த உலகக் கோப்பை தொடரில் பங்கு பெறாமல் போனதும் கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் அதுவே முதலும் கடைசியும் ஆகும்.
ஆப்பிரிக்கா புறக்கணிப்பு
1966-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த எந்தவொரு அணியும் பங்கேற்கவில்லை. ஃபிபா நிர்வாகம், ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த அணிகளை உலகக் கோப்பையில் பிரதிநிதித்துவப்படுத்தவதில் நியாயமாக நடந்துகொள்ளவில்லை என்று கூறி அந்தப் போட்டியை ஒட்டுமொத்த ஆப்பிரிக்க அணிகளும் புறக்கணித்தன.
பிரேசில் மக்கள் போராட்டம்
பிரேசிலில் கடந்த 2014ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டி நடைபெற்றது. அப்போது, உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு செலவிடுவதற்கு பதிலாக, சமூக நலத் திட்டங்களுக்கும், வீடுகளை கட்டித் தருவதற்கும் அரசு செலவிடலாம் என்று கூறி பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர்.
1978ஆம் ஆண்டு அர்ஜென்டினா அணி, கோப்பையை வென்றது. அந்நாட்டு அரசுதான் உலகக் கோப்பையை நடத்தியது. 1976ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் ராணுவ ஆட்சி வந்தது. இதனால், அந்நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டது. ஒற்றுமையை நிலைநாட்ட அந்தப் போட்டி நடைபெற்றது. எனினும், போட்டி முடிந்த பிறகு, அந்த அணி வெற்றியைக் கொண்டாடவில்லை. அந்த பைனலில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியனானது அர்ஜென்டினா.