உலக மக்கள் மத்தியில் ஜப்பான் நாட்டிற்கும், ஜப்பானியர்களுக்குமே என்றுமே தனிச்சிறப்பு உண்டு. உலககோப்பை கால்பந்து தொடரில் பலமிகுந்த ஜெர்மனி அணிக்கு எதிராக நேற்று களமிறங்கிய ஜப்பான் அணி 2-1 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்தது. இந்த வெற்றி ஜெர்மனி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், உலக கால்பந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவே அமைந்தது.


இந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு ஜப்பான் ரசிகர்களும், ஜப்பான் அணியினரும் செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. ஜப்பான் –ஜெர்மனி அணி மோதிய போட்டி கலீபா சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்த இந்த மைதானத்தில் போட்டியை காணவந்த பலரும் சில குப்பைகளை அங்கேயே விட்டுச்சென்றனர்.






ஆனால், ஜப்பான் ரசிகர்களோ போட்டி முடிந்த பிறகு வெற்றிக் களிப்பின் மத்தியிலும் மைதானம் முழுவதும் இருந்த குப்பைகளை தாங்களே பைகளில் சேகரித்து அகற்றினர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களுக்கு ஃபிபாவும் பாராட்டு தெரிவித்துள்ளது.


ஜப்பான் ரசிகர்கள் இவ்வாறு என்றால், ஜப்பான் நாட்டு கால்பந்து அணியோ அதைவிட ஒரு படி மேலே சென்று நெகிழ வைத்துள்ளனர். அதாவது, குறிப்பாக எந்தவொரு விளையாட்டு அணியாக இருந்தாலும் விளையாடி முடித்த பிறகு மிகவும் களைப்புடன் காணப்படுவார்கள். அந்த களைப்பிலேயே அவர்களுக்காக மைதானத்தில் ஒதுக்கப்பட்ட அறையில் இருந்து சென்று விடுவார்கள்.






ஆனால், நேற்று ஜெர்மனிக்கு எதிராக வரலாற்று வெற்றி பெற்ற ஜப்பான் அணி வீரர்கள் போட்டி முடிந்து ஹோட்டலுக்கு செல்வதற்கு முன்பாக மைதானத்தில் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் வழங்கப்பட்ட துண்டுகள், பைகள் அனைத்தையும் முறையாக அடுக்கி வைத்து அந்த அறையையும் மிகவும் சுத்தமாக்கிய பிறகே சென்றனர். ஜப்பானியர்கள் சுத்தம் செய்த அறையின் புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது. ஜப்பான் ரசிகர்கள் மற்றும் ஜப்பான் நாட்டு அணியினரின் செயலை ஃபிபா பாராட்டியுள்ளது.


தற்போது உலகம் எதிர்கொண்டு வரும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக சுற்றுச்சூழல் சுகாதாரம் உள்ளது. அதனால், சுத்தத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கே கற்றுக்கொடுக்கும் விதமாக மைதானத்தையும், அறையையும் ஜப்பானியர்கள் சுத்தம் செய்து சென்றது அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.