22 ஆவது உலகக் கோப்பைப் போட்டியின் இன்றைய மூன்றாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-டென்மார்க் இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் எம்பாபே அடித்த 2 கோல்களால் அந்த அணி 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது. மேலும், இரண்டாவது சுற்றுக்கு (Round 16) முன்னேறிய முதல் அணி என்ற சாதனையையும் படைத்தது பிரான்ஸ்.


முன்னதாக, இன்றைய ஆட்டங்களில் துனிசியாவை ஆஸ்திரேலியாவும், சவுதி அரேபியாவை போலந்தும்  வீழ்த்தியது. டி பிரிவில் டென்மார்க்கும், பிரான்ஸும் இடம்பெற்றுள்ளனர். முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.


டென்மார்க்-துனிசியா இடையிலான ஆட்டம் டிரா ஆனது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பரபரப்பாக நடைபெற்றது. தரவரிசையில் 4ஆவது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணி, முதல் கோலை இரண்டாவது பாதி ஆட்டத்தில் போட்டது.


அந்த கோலை எம்பாப்பே வலைக்குள் செலுத்தினார். இதையடுத்து, டென்மார்க் வீரர் கிறிஸ்டின்சென் 68ஆவது நிமிடத்தில் கோல் அடித்து பிரான்ஸுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.


2 கோல்களை அடித்த எம்பாபே


பின்னர், பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு 86ஆவது நிமிடத்தில் கலக்கலாக எம்பாபே மற்றொரு கோலை வலைக்குள் தள்ளினார். 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் முன்னிலை வகித்ததை கொண்டாடும் வகையில் ஆர்ப்பரித்தார் எம்பாபே. ரசிகர்களும் கூச்சலிடத் தொடங்கினர்.






 


பிரான்ஸ் நட்சத்திர வீரர் எம்பாபே பிரான்ஸுக்காக கடந்த 12 முறை விளையாடி ஆட்டங்களில் 14 கோல்களை பதிவு செய்துள்ளார்.






2022 உலகக் கோப்பை கால்பந்தில் பிரான்ஸ் வீரர் கிரேஸ்மேன் கோல் அடிப்பதற்கான 9 வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.


பிரான்ஸ்-டென்மார்க் இடையிலான ஆட்டம்  ஸ்டேடியம் 974-இல் (Stadium 974) நடைபெற்றது. இந்த ஸ்டேடியத்தில் மொத்தம் 40 ஆயிரம் பேர் வரை அமர முடியும். கப்பலில் பயன்படுத்தப்படும் இரும்பு சரக்கு கண்டெய்னர்களால் இந்த ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 974 கண்டெய்னர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை வரலாற்றில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஸ்டேடியம் இதுதான். இந்தப் போட்டி முடிந்ததும் இந்த ஸ்டேடியம் அகற்றப்பட்டு விடும். இங்கு மொத்தம் 7 ஆட்டங்கள் நடக்கிறது.


பிரான்ஸ் அணி குரூப் பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.


FIFA WORLDCUP 2022: உலகக் கோப்பை திருவிழா: இன்றைக்கு யார் யாருக்கு மேட்ச்? முதல் வெற்றியை பெறுமா அர்ஜெண்டினா..?


உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை.


கடைசியாக 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.


8 பிரிவுகள்
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்திக்கும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறும். 


மொத்தம் எத்தனை ஆட்டங்கள்
48 லீக் ஆட்டங்கள் உள்பட மொத்தம் 64 ஆட்டங்கள் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் நடைபெறுகின்றன.