இன்றைய முதல் ஆட்டத்தில் தரவரிசையில் 30-ஆவது இடத்தில் உள்ள துனிசியா, 38-ஆவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.


அடுத்து 6.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் சி பிரிவில் இடம்பெற்றிருந்த போலந்து அணி, தரவரிசையில் 51 ஆவது இடத்தில் உள்ள சவுதி அரேபியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்கிய சவுதி அரேபிய அணி இந்த ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டது. 


முதல் பாதி ஆட்டத்தில் பியோடர் ஜிலின்ஸ்கியும், அடுத்த பாதியில் ராபர்ட் லிவன்டோஸ்கியும் கோல் மழை பொழிந்தனர். இதில், 82ஆவது நிமிடத்தில் ராபர்ட் அடித்த கோலானது எளிதாக போலந்து அணிக்கு கிடைத்த கோலாக அமைந்தது. சவுதி வீரரின் தவறால் அந்த பொன்னான வாய்ப்பை கோலாக மாற்றினார் ராபர்ட். இதுதான் இவருக்கு முதல் உலகக் கோப்பை கோல் ஆகும்.


போலந்து வீரர் சாதனை
 
அதேபோல், உலகக் கோப்பையில் கோல் அடித்ததும், கோல் அடிக்க உதவியதும்  என ஒரே ஆட்டத்தில் இரு பணிகளை சிறப்பாக கவனித்த முதல் போலந்து வீரர் ராபர்ட் தான். இதற்கு முன்பு 1982ஆம் ஆண்டு போலந்துக்காக அந்த அணியின் வீரர் ஜனுஸ் இதேபோன்று கோல் அடித்துள்ளார்.






குரூப் சி பிரிவில் தற்போது போலந்து 4 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் 3 புள்ளிகளுடன் சவுதி அரேபியாவும் உள்ளன.


இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியும், மெக்சிகோவும் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் இதே பிரிவில் உள்ளன. முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டது.


இதனால், இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய நிலையில் அர்ஜென்டினா உள்ளது. நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினா வெற்றி பெற்றாக வேண்டியுள்ளது. 
ஒருவேளை அதுபோன்று நடந்துவிட்டால், அர்ஜென்டியா நாக் அவுட் சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.


1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா, மெக்சிகோவை வீழ்த்தினால், குரூப் சி பிரிவில் போலந்துக்கு அடுத்த இடத்திற்கு அந்த அணி முன்னேறிவிடும். 


வரும் 30 ஆம் தேதி அர்ஜென்டினாவுக்கு எதிராக போலந்து மோதவுள்ளது. அந்த ஆட்டத்திலும் அர்ஜென்டினாவை வென்றுவிட்டால், 2 ஆவது சுற்று ஆட்டத்திற்கு அர்ஜென்டினா முன்னேறிவிடும்.


ட்ரா செய்தால் என்ன ஆகும்?
ஒருவேளை மெக்சிகோவுடன் அர்ஜென்டினா ட்ரா செய்தால், அந்த அணி குரூப் பிரிவில் கடைசி இடத்திலேயே இருக்கும். சவுதி அரேபியா-மெக்சிகோ ஆட்டத்தின் முடிவும், அர்ஜென்டினா-போலந்து இடையிலான ஆட்டத்தின் முடிவும் முக்கியப் பங்கு வகிக்கும்.


போலந்து உடனான ஆட்டத்தில் அர்ஜென்டினா 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு நல்கும்.


ஒருவேளை மெக்சிகோவுடன் தோல்வி என்றால்...
ஒருவேளை மெக்சிகோவுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினா தோல்வியைத் தழுவினால், அர்ஜென்டினா அடுத்த சுற்றுக்கு முன்னேறாது.


அதேநேரம், மெக்சிகோ 4 புள்ளிகளுடன் போலந்துடன் சமநிலை வகிக்கும். போலந்துடனான ஆட்டத்தில் நெதர்லாந்து வெற்றி பெற்றாலும் 3 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும். இதனால் அந்த அணி குரூப் சுற்றுடன் வெளியேற வேண்டிய நிலை தான் ஏற்படும். என்ன நடக்கும் என்று நாளை தெரிந்துவிடும்.


கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை கால்பந்து போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.


32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்திக்கும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறும். 


48 லீக் ஆட்டங்கள் உள்பட மொத்தம் 64 ஆட்டங்கள் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் நடைபெறுகின்றன.