உலகம் முழுவதும் கிரிக்கெட் தொடருக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு கால்பந்து தொடர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. 


உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடரானது வருகின்ற 20-ஆம் தேதி கத்தார் நாட்டில் தொடங்க இருக்கிறது. 32 நாடுகள் பங்கேற்க உள்ள இந்த கால்பந்து தொடர் 28 நாட்கள் ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் நடைபெற இருப்பது இதுவே முதல்முறை.  இந்த உலகக்கோப்பை தொடரில் 32 அணிகள் பங்கேற்கும் நிலையில், இவை மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, கர்த்தாரில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கிறது. தென் அமெரிக்க நாடான பிரேசில் இதுவரை 5 முறை சாம்பியன் ஆகி அதிக முறை உலகக் கோப்பையில் சாம்பியன் ஆன அணி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.


இந்த நிலையில், 2022 FIFA உலகக் கோப்பைக்கான போர்ச்சுகல் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டஸ் சாண்டோஸ் உலகக் கோப்பைக்கான 26 பேர் கொண்ர அணியை அறிவித்தார். இந்த ஆண்டும் போர்ச்சுகல் அணிக்கு நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. போர்ச்சுகல் அணியை பொறுத்தவரை இதுவரை ஒருமுறை கூட பிபா உலகக் கோப்பை வென்றதில்லை. இதனால் இந்தமுறை எப்படியாவது கோப்பையை வெல்லும் முயற்சியில் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி களமிறங்கும். 2016 இல் யூரோ கோப்பையை வென்று கொடுத்ததே அவரது சிறந்த சர்வதேச சாதனையாக உள்ளது. 






கிறிஸ்டியானோ ரொனால்டோ:


உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒருவர். சமீபத்தில்தான் இவர் ஒட்டுமொத்த கால்பந்து அரங்கில் 700 கோல்களை அடித்த முதல் கால்பந்து வீரர் என்ற சாதனையை படைத்தார். அதேபோல், கடந்த உலகக் கோப்பையில் ஸ்பெயினுக்கு எதிராக ரொனால்டோ அடித்த ஃப்ரீ-கிக் கோலை யாரும் மறந்துவிட முடியாது.  போர்ச்சுகல் அணி இதுவரை ஃபிபா உலகக் கோப்பையை வென்றதில்லை என்றாலும், உலகக் கோப்பை தொடரில் போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோவின் பங்கை யாராலும் மறக்க முடியாது.


இந்த நிலையில், இந்த உலகக் கோப்பை தொடர்தான் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கடைசி உலகக் கோப்பையாக இருக்கும். இதன் காரணமாக தனது போர்ச்சுகல் அணியை ரொனால்டோ எவ்வளவு தூரம் அழைத்துச் செல்வார் என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கும். 


ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கான போர்ச்சுகல் அணி:


கோல்கீப்பர்கள்: டியோகோ கோஸ்டா , ரூய் பாட்ரிசியோ , ஜோஸ் சா


டிஃபென்டர்கள்: ஜோவா கேன்செலோ, டியோகோ டலோட், பெப்பே, ரூபன் டயஸ், டானிலோ பெரேரா, அன்டோனியோ சில்வா , நுனோ மென்டிஸ் , ஆர். குரேரியோ


மிட்ஃபீல்டர்கள்: ரூபன் நெவ் ஸ், ஜோவா பால்ஹின்ஹா , வில்லியம் கார்வால்ஹோ , புருனோ பெர்னாண்டஸ் , விடின்ஹா ​​, ஒடாவியோ, ஜோவா மரியோ , மேதியஸ் நூன்ஸ் , பெர்னார்டோ சில்வா


பார்வர்டு : ரபேல் லியோ , ஜோவா பெலிக்ஸ் , ரிக்கார்டோ ஹோர்டா , கோன்கலோ ராமோஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ , ஆண்ட்ரே சில்வா